தேசிய மக்கள் சக்தியை தேர்தல் ஆணைக்குழு பதிவு செய்த விதம் சட்டவிரோதமானது என்றும், இது தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைக்க அனுமதிக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் மார்ச் 04-ம் திகதி சமர்ப்பணங்களை உறுதிப்படுத்தி விசாரணை அழைப்பதற்கு உயர் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது.
பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வென்னப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று அழைக்கப்பட்டிருந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு, நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்து, உரிய மனுவை பரிசீலிக்க திகதி ஒதுக்குமாறு கோரினார்.
அந்த கோரிக்கையை ஏற்று, மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், சம்பந்தப்பட்ட மனுவை பரிசீலிப்பதற்காக மார்ச் 4-ம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டது.
வினிவித பெரமுனவை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய மறுத்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவுக்கு அமைய நாகானந்த கொடித்துவக்குவினால் இந்த இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியில் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தியை அரசியல் கட்சியாகப் பதிவு செய்தமை முற்றிலும் சட்டத்திற்கு முரணானது என அந்த மனுவின் ஊடாக நாகானந்த கொடித்துவக்கு கூறுகின்றார்.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி பதிவு செய்யப்பட்ட விதம் சட்டவிரோதமானது என சமர்ப்பணங்களை முன்வைப்பதற்கு அனுமதி வழங்குமாறு நாகாநந்த கொடித்துவக்கு அந்த மனுவின் ஊடாக உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.