‘கோட்டாவின் புத்தகம்’ – கொழும்பு அரசியலில் ஏற்படுத்தும் சர்ச்சை: இராஜதந்திரிகளுக்கும் சிக்கல் – கடும் அதிருப்தி

0
59
Article Top Ad

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த வியாழக்கிழமை ‘என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றிய சதி’ என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தார்.

புத்தகத்தின் முதல் பிரதிநிதிகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டதாக முதல் பதிப்பை அச்சிட்ட விஜித யாப்பா பதிப்பகத்தின் தலைவர் விஜித யாப்பா தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு ஜுலை 9ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியிலிருந்து விலகுமாறு கொழும்பில் திரண்ட பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்களின் எதிர்ப்புக்கு முகங்கொடுக்க முடியாது அவர் இலங்கையை விட்டு தப்பிச் சென்றதுடன், சிங்கப்பூரில் இருந்து தமது பதவி விலகல் கடிதத்தையும் அனுப்பியிருந்தார்.

கோட்டாபய ராஜபக்ச எழுதியுள்ள புத்தகத்தில் தாம் பதவியில் இருந்து அகற்றப்பட சர்வதேச சதியொன்று முன்னெடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

அவரது புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள சில விடயங்கள் தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

ரஷ்யா எழுப்பியுள்ள கேள்வி

”கோட்டபாய ராஜபக்சவினால் புதிதாக வெளியிடப்பட்ட புத்தகம் பற்றி இலங்கை பத்திரிகைகளில் வெளியானதை கவனித்தோம்.

அதில், வெளிநாட்டு தூதுவர்கள் இலங்கைக்கு இராணுவ நோக்கங்களுக்காக வருகை தருவது கட்டுப்படுத்தப்பட வேண்டும் கூறப்பட்டுள்ளது.

எந்தெந்த நாடுகளின் இராஜதந்திரிகள் இவ்வாறு வருகின்றனர் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.” இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் கூறியுள்ளது.

அதிருப்தியில் பன்நாட்டு இராஜதந்திரகள்

அதேபோன்று மேலும் பல நாடுகளின் இராஜந்திரிகள் இவ்வாறான கருத்துகளை கண்டித்துள்ளதாகவும் இதுகுறித்து ராஜபக்ச தரப்பிடம் விரைவில் கேள்வியெழுப்ப உள்ளதாகவும் இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிகிறது.

குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்கத்தேய நாடுகளின் இராஜதந்திரிகள் இந்த “சர்வதேச சதி“ தொடர்பான கோட்டாவின் கருத்தில் அதிருப்தியுற்றுள்ளனர்.

இராஜதந்திரிகளை தமது அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்தும் செயல்பாடுகளை மொட்டுக் கட்சி நிறுத்த வேண்டுமென்ற கோரிக்கையை இவர்கள் விரைவில் வலியுறுத்த உள்ளதாகவும் அறிய முடிகிறது.

சரிந்துள்ள மொட்டுக் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கில் சில நகர்வுகளை ராஜபக்ச தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு வெளிப்பாடாகதான் இந்தப் புத்தகம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

கோட்டாவின் கருத்தை ஆதரித்த நாமல்

”தேசிய மற்றும் சர்வதேசத்தின் சூழ்ச்சிகளினால் தான் கோட்டபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் வீழ்த்தப்பட்டது.

இதனால் கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற கோட்டாபயவுக்கு எதிரான அரகலய எனப்படும் கிளர்ச்சியின் பின்னணி என்ன என்பதை மக்கள் நன்கு விளங்கிக் கொண்டுள்ளார்கள்.” என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.