மாலத்தீவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் இந்தியா, இலங்கை மற்றும் மலேசியாவில் வைக்கப்படும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்குச் சாவடிகளை இடமாற்றம் செய்வதற்கு சுமார் 11,000 மாலத்தீவு மக்கள் தங்கள் மீள்பதிவுகளை சமர்ப்பித்ததையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாலத்தீவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் வாக்குச்சாவடிகளை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்வதற்கான ஆறு நாள் கால அவகாசம் சனிக்கிழமையுடன் காலாவதியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் திருவனந்தபுரம் இலங்கையின் கொழும்பு மற்றும் மலேசியாவின் கோலாலம்பூர் ஆகிய மூன்று இடங்களிலும் வாக்குப்பெட்டிகள் வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையிலும் மலேசியாவிலும் போதுமான மக்கள் பதிவுசெய்துள்ளதாகவும் . இந்தியாவில் திருவனந்தபுரத்தில் 150 பேர் பதிவு செய்துள்ள நிலையில் தேர்தல்களுக்கான வாக்குப்பெட்டிகளை அங்கு வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணையத்தின் பொதுச் செயலாளர் ஹசன் ஜகாரியாவை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் மீள்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதை சுட்டிக்காட்டிய ஜகாரியா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தாய்லாந்தில் வாக்களிப்பு நடத்தப்படாது என தெரிவித்துள்ளார்.
மாலத்தீவில் 93 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மொத்தம் 389 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் இந்தியா சார்பு பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி – 90 இடங்களில் போட்டியிடுகின்றனர்.
அத்துடன் மாலத்தீவு முன்னேற்றக் கட்சி மற்றும் மக்கள் தேசிய காங்கிரஸ் (பிஎன்சி) ஆகியவற்றின் முக்கிய ஆளும் கூட்டணி 89 இடங்களில் போட்டியிடுகிறது.
மாலத்தீவு சீன சார்பு ஜனாதிபதி முகமது முய்சு, பிஎன்சி கட்சியை சேர்ந்தவர் என்பதுடன் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் கடந்த ஆண்டு பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.