ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை தொடர்ந்து பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அடிப்படையில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
எச்சரிக்கையை மிக உயர்ந்த நிலையில்
குறிப்பாக ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தளங்கள் போன்ற பொது இடங்களில் ஆயுதப் படைகளின் ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
”பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு சில மாதங்களுக்கு முன்பு இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கான பொறுப்பை ஐ.எஸ் அமைப்பு ஏற்றுள்ளது. இதனால் பிரான்ஸில் பயங்கரவாத எச்சரிக்கையை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.” என அந்நாட்டு பிரதமர் கேப்ரியல் அட்டால் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கேப்ரியல் அட்டால் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராய்ட்டர்ஸின் தகவலின் பிரகாரம், பிரான்சில் நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஐரோப்பாவில் பல நாடுகளில் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4 தீவிரவாதிகளும் கைது
கடந்த வெள்ளிக்கிழமை, ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஐஎஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 143 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 140 பேர் படுகாயம் அடைந்தனர்.
மொஸ்கோவின் புறநகர் பகுதியான கிராஸ்னோகோர்ஸில் ‘குரோகஸ் சிட்டி ஹால்’ என்ற அரங்கம் உள்ளது. அங்கு ‘பிக்னிக்’ என்ற ராக் இசைக் குழுவின் கச்சேரிக்கு ஏற்பாடு ஏற்பட்டிருந்தது. அரங்கத்தின் 7,500 இருக்கைகளும் ரசிகர்களால் நிரம்பி இருந்தன.
இரவு 8 மணிக்கு இசைக் கச்சேரி தொடங்க இருந்த நிலையில் திடீரென 4 தீவிரவாதிகள் தானியங்கி துப்பாக்கிகளுடன் அரங்கத்துக்குள் நுழைந்து நாலாபுறமும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். தாக்குதல்களுக்கு உள்ளான 143 பேரே இவ்வாறு உயிரிழந்தனர்.
இந்த நிலையில் தாக்குதல்களை மேற்கொண்ட 4 தீவிரவாதிகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின்,
”மொஸ்கோ இசை நிகழ்ச்சியில் நடந்த தாக்குதல், ரத்தம் தோய்ந்த மற்றும் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல்.
இதில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களை சுட்டுக் கொன்று பயங்கரவாத செயலில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உக்ரைனுக்கு தப்ப முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பயங்கரவாதியாக இருப்பவர்கள், தாக்குதலுக்கு திட்டமிட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும்.” எனக் கூறியுள்ளார்.