உக்ரைனுக்கு F-16 ரக போர் விமானங்களை வழங்கினால் சுட்டு வீழ்த்தப்படும்: மேற்குலகை எச்சரித்த புடின்

0
96
Article Top Ad

”ரஷ்யா எந்தவொரு நேட்டோ நாட்டையும் தாக்குவதற்கு முடிவுகள் எதுவும் எடுக்கவில்லை.

போலந்து, பால்டிக் நாடுகள் அல்லது செக் குடியரசை ரஷ்யா தாக்காது. ஆனால், மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு F-16 ரக போர் விமானங்களை வழங்கினால் அவை ரஷ்யப் படைகளால் சுட்டு வீழ்த்தப்படும்.” என ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டு பெப்ரவரியில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மேற்குலக நாடுகளுடனான ரஷ்யாவின் உறவுகளில் ஆழமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது 1962ஆம் ஆண்டு கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பிறகு உருவான பாரிய நெருக்கடியாகும்.

இந்த நிலையில், ரஷ்ய விமானப்படை விமானிகளிடம் பேசிய புடின், 1991 சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அமெரிக்க தலைமையிலான இராணுவக் கூட்டணி கிழக்கு நோக்கியும் ரஷ்யாவை நோக்கியும் விரிவடைந்துள்ளது.

ஆனால் நேட்டோ படையை தாக்கும் திட்டம் மொஸ்கோவிடம் இல்லை.” எனக் கூறினார்.

ரஷ்யாவின் இலக்குகள் மாறும்

“நாங்கள் சில நாட்டைத் தாக்குவோம் என போலந்து, பால்டிக் நாடுகள் மற்றும் செக் நாடுகள் பயமுறுத்தப்படுகின்றன. இது முற்றிலும் முட்டாள்தனமானது. அவ்வாறான எந்தவொரு தீர்மானத்தையும் ரஷ்யா எடுக்கவில்லை.” எனவும் சுட்டிக்காட்டினார் புடின்.

மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அனுப்புவதாக உறுதியளித்த F-16 போர் விமானங்கள் பற்றிய கேள்விக்கு, அத்தகைய விமானங்கள் உக்ரைனின் நிலைமையை மாற்றாது என்று புடின் பதில் அளித்தார்.

F-16 அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது எனக் கூறிய புடின், அவை மூன்றாம் நாடுகளில் உள்ள விமான நிலையங்களிலிருந்து பயன்படுத்தப்பட்டால், அவை எங்கிருந்தாலும் எங்களது இலக்குகள் மாறும்” என்று புடின் எச்சரித்துள்ளார்.

பெல்ஜியம், டென்மார்க், நோர்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் F-16 விமானங்களை உக்ரைனுக்கு நன்கொடையாக வழங்குவதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.