இந்த விடயத்தை எழுதுவதற்கு முன்னர் ஒரு விடயத்தை எழுதுவதற்கு முனைகின்றேன். தமிழினம் தனக்கு கிடைக்கின்ற வாய்ப்புக்களை எல்லாம் பல சந்தர்பங்களில் பயன்படுத்த தவறியிருக்கின்றீர்கள் என்ற கசப்பான உண்மை பலருக்கு விளங்குவது கடினம். தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் உள்ள சவால்கள்.
தமிழ் பொது வேட்பாளரை கட்சி அரசியலாக்க முயற்சி செய்வார்கள் – இதற்கு கட்சி அரசியலில் இருப்பவர்கள் மக்கள் நலனை விடுத்து தங்கள் சுயநலனை முன்னிறுத்துவதே முதற் காரணம். கட்சி அரசியலாக மாற்றி ஏனைய கட்சிகளின் ஆதரவுத் தளத்தை மலினப்படுத்துவதோடு மக்களை குழப்பத்துக்குள்ளாக்குவது.
ஏன் என்றால் தமிழ் பொது வேட்பாளர் தமிழ் தேசிய இனத்தின் தேசிய அரசியலை ஒழுங்குபடுத்தி உறுதியான தளத்தில் திரட்சியாக்கிய புதிய பரிமாணத்தை தொடும் என்பதால் கட்சிகளின் தலைமைகளின் எதிர்காலம் குறித்து அச்சமடைகின்றார்கள்.
மக்களைத் திரட்ட முடியவில்லை
முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்று 15 ஆண்டுகளை கடக்கவிருக்கின்ற இந்த காலகட்டம் வரைக்கும் தமிழ் தேசிய கட்சிகளால் மக்களை ஓரணியில் திரட்சியாக்க முடியவில்லை என்ற தோல்வியை கட்சிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். காரணம் நீங்கள் மக்களை கொள்கைகளால் கூறுபோட்டவர்கள்.
இனப்பிரச்சனையை 15 ஆண்டுகளில் நீர்த்து போக செய்தவர்கள். இனப்பிரச்சனைக்கான அடிப்படை காரணம் என்ன? இலங்கை பாராளுமன்றத்தில் இயற்றப்படுகின்ற சட்டங்களே காரணம்.
சட்டங்களை இயற்றும் போது எந்தவொரு தாக்கத்தையும் செலுத்த முடியாத நிலையில் தமிழர்கள் இருப்பதுதான் காரணம் என்றால் சமஸ்டி பாராளுமன்ற முறையில் மாற்றம் கொண்டு வருமா? ஒரு நாடு இரு தேசம் இதில் ஒரு நாடு என்றால் பாராளுமன்றம் மாறுமா? அடுத்தது 13 வது திருத்தம் இது பாராளுமன்ற நடைமுறையை மாற்றுமா?
இவை பேச்சளவிலும் சொல்லளவிலும் வேறுபட்டதாய் ஒருக்கலாம் ஆனால் ஒரே பாராளுமன்ற நடைமுறை கொண்டவை என்பது பலருக்கு விளங்கும்.
இனவாதமற்ற பரப்புரை?
எனவே யுத்தம் முடிவடைந்த பின்னர் 15 ஆண்டுகளின் பின்னரும் எமது மக்களின் அபிலாசைகளையும் தியாகங்களையும் கட்சி அரசியலுக்காய் அடகு வைத்தால் காலம் நிற்சயம் பதிலளிக்கும் .
தென்னிலங்கையில் இனவாதம் தூண்டப்படும் என்ற பரப்புரை- இனவாதமற்ற அரசியல் பரப்புரை தென்னிலங்கையில் இருந்ததுண்டா..? பின்னர் என்ன புதிதாய் தோன்றுவது போன்ற பரப்புரை..? மாறி மாறி ஆட்சிக்கு வந்த 7 இலங்கை சனாதிபதிகளும் இனவாதத்தையே தூண்டியுள்ளனர். .
அதன் விளைவைத்தான் இப்போது இலங்கை அனுபவிக்கின்றது. பெரிய வெளிநாட்டு சக்திகள் இருக்கலாம் என்ற பரப்புரை – தமிழர்களுக்கு சுயாட்சி தீர்வை தருவதற்கு வெளிநாட்டு சக்திகள் துணையாக நின்றால் என்ன தவறு உள்ளது…?
சர்வதேச நீதி பொறிமுறையை எதிர்பார்த்து காத்திருக்கின்றீர்கள் என்றால் சர்வதேசம் என்றால் யார்? அமெரிக்கா சார் மேற்குலகம் நாடுகளாக? அல்லது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளா? அல்லது இந்தியா…? அல்லது சீனா? யார் சர்வதேசம்…?
தன் மடியில் கனம் இல்லாத போது பூகோள அரசியலை பயன்படுத்தும் இராஜதந்திரம் தெரிய வேண்டும். இங்கு *Win Win* நுட்பம் இருக்க வேண்டும்.
வாக்குகளின் சக்தி
தென்னிலங்கையில் எவரையோ கொண்டு வருவதற்கான முயற்சி என்ற பரப்புரை- இலங்கை அதிபர் தேர்தலை பொறுத்தவரை தமிழ் பேசும் இனத்தின் வாக்குகள் இன்றியே தென்னிலங்கையில் சனாதிபதி தெரிவு செய்ய முடியும்.
என்றால் தமிழ் பேசும் இனத்தின் வாக்குகளின் சக்தி வலுவிழந்துள்ளது அப்படியென்றால் தமிழ் பேசும் இனம் வாக்குகளை வலுவாக்குவதற்கான தளமாக தமிழ் பொது வேட்பாளர் என்பதை பயன்படுத்த முடியும். எனவே இந்த பரப்புரை அடிப்படையில் நியாயமற்றது.
இறுதி நேரத்தில் பொது வேட்பாளர் சோரம் போக வாய்புண்டு என்ற பரப்புரை – ஒரு வலுவான பொது தளத்தில் பொது வேட்பாளர் நிர்ணயிக்கப்படுவதால் இது வெறும் கற்பனையான குற்றச்சாட்டு.
தமிழ் பொது வேட்பாளருக்கு பின்னால் தென்னிலங்கை சக்தி உள்ளது – உண்மை என்னவென்றால் தென்னிலங்கை அரசியல் களம் தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் அச்சம் அடைந்துள்ளது.
காரணம் இது வரைக்கும் ஏதோ ஒரு வார்த்தையை நம்பவைத்து எம்மை திசைதிருப்பி தென்னிலங்கையருக்கு வாக்களிக்க செய்து ” தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை நாங்கள் உள்ளக பொறிமுறையை பயன்படுத்தி தீர்த்துக் கொள்வோம் . அதற்காகத்தான் எமக்கு அவர்கள் வாக்களித்து இருக்கின்றார்கள் என்ற பிரச்சாரம் சர்வதேசத்திற்கு செய்யப்பட்டுள்ளது.”
இது தோல்வியாகி விடும் என்று அச்சப்படுகின்றார்கள். எனவே தமிழ் போது வேட்பாளரை எதிர்ப்பவருக்கு பின்னால்தான் தென்னிலங்கை சக்தியுள்ளது என்ற சந்தேகம் வலுவாகின்றது.
ஜனநாயகப் படுகொலையா?
வாக்களிகாது ஒதுங்க வேண்டும் என்ற பரப்புரை- எமது மக்களை ஜனநாயகத்து எதிரானவர்கள் என்பதை சர்வதேசத்திற்கு காட்டமுனையும்.
எமது மக்களுக்கான இனப்பிரச்சனைக்கான தீர்வை முன்நிறுத்தி அந்த கொள்கையின் பால் மக்களை வாக்களிக்க செய்வது மக்கள் அணையாகும் . அதாவது எமது மக்களுக்கான நிலைப்பாடாக ஏற்க முடியும். ஆனால் மக்களை வாக்களிக்காமல் செய்து மக்கள் ஆணையை தந்துள்ளார்கள் என்றால் அது ஜனநாயக படுகொலையாக கொள்ள முடியும்.
அதாவது மக்களை பங்காளர்களாக்கி மக்கள் எமது கொள்கைக்கு தரும் ஆதரவே பூரண மக்களாணையாகும். எனவே விமர்சனம் என்பது தெளிவை அதிகரிக்கும் ஒரு தந்திரோபாயம்தான் .
தமிழ் போது வேட்பாளர் என்பது 21 ஆம் நூற்றாண்டில் எமது இனப்பிரச்சனையை சர்வதேச உதவியுடன் தாமே தீர்த்துக்கொள்ளும் நுட்பமாண இராஜதந்திர நகர்வுதான்.
-எஸ்.சீலன்-
(சிவில்சமூகச் செயற்பாட்டாளர்)