பாகிஸ்தான் அணிக்கு புதிய பயிற்சியாளர்

0
34
Article Top Ad

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணத்துக்காக அணிகள் தயாராகி வரும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) தங்களது புதிய தலைமைப் பயிற்சியாளரை ஏப்ரல் இறுதிக்குள் அறிவிக்க உள்ளது.

இரண்டாவது முறையாக டி20 உலகக் கிண்ணத்தை வெல்லும் நோக்கில் புதிய பயிற்சியாளரை நியமிக்கும் தனது விருப்பத்தை பிசிபி யின் தலைவர் மொஹ்சின் நக்வி வெளிப்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இராணுவப் பயிற்சிக்காகச் சென்ற சில வாரங்களுக்குப் பின்னர் அணிக்குள் பல கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.

ஷாஹீன் ஷா அப்ரிடிக்கு பதிலாக பாபர் அசாம் வெள்ளை பந்து அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தற்போது அணியின் பயிற்சியாளரை மாற்ற பிசிபி தீர்மானித்துள்ளது.

“பயிற்சியாளர் நியமனம் உரிய செயல்முறையின் மூலம் செய்யப்படும். அனைத்து கடமைகளையும் வாரியம் நிறைவேற்றும்.” என்றும் பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி தெளிவுபடுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் கடந்த சில வருடங்களாக இடைக்கால உறுப்பினர்களால் வழிநடத்தப்பட்டு வருகிறது. இன்சமாம்-உல்-ஹக் ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான தேர்வுப் பணிகளை மேற்கொள்கிறார்.

நியூயார்க்கில் எதிர்வரும் ஜூன் 9ஆம் திகதி டி20 உலகக் கிண்ணத்தில் பரம எதிரியான இந்தியாவை பாகிஸ்தான் சந்திக்கிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்துடன் குழு A இல் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.