தமிழில் முழு உரையை ஆற்றிய சஜித்

0
52
Article Top Ad

இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு பகுதியை போன்று மத்திய மலைநாட்டிலும் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

1820களின் பின்னர் தென்னிந்தியாவில் இருந்து இவர்கள் பெருந்தோட்டங்களில் பணிப்புரிவதற்காக ஆங்கிலேயர்களால் அழைத்துவரப்பட்டனர்.

1948ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களை இவர்கள் பெற்றதால் அச்சமடைந்த தென்னிலங்கை சிங்களத் தலைவர்கள் இவர்களது வாக்குறுதிமையையும் குடியுரிமையையும் பறித்தனர்.

அதன் பின்னர் இந்த மக்களை நாட்டை விட்டு இந்தியாவுக்கு திருப்பியனுப்பும் படலத்தையும் ஆரம்பித்தனர். சிறிமா – சஸ்திரி ஒப்பந்தத்தின் ஊடாக மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மலையகத் தமிழர்களை இலங்கை அரசாங்கம் நாட்டைவிட்டு அனுப்பியது.

தாயகம் திரும்பாத மலையகத் தமிழர்கள் இலங்கையில் குடியுரிமையற்ற சமூகமாக வாழ்ந்துவந்தனர். பின்நாட்களில் கடுமையான போராட்டங்கள் ஊடாக இலங்கைத் தீவில் குடியுரிமையையும் வாக்குரிமையையும் இவர்கள் பெற்றனர்.

நீண்டகாலமாக இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்ந்த மலையக மக்களின் உரிமைகள் தொடர்பில் எந்தவொரு அரசியல் தலைமையும் கண்டுகொள்ளவில்லை.

வெறும் சம்பளப் பிரச்சினை மாத்திரமே இந்த சமூகத்துக்கு இருப்பதான தொனியில் இவர்களது மேடை பேச்சுகள் அமையும்.

ஆனால், இந்த சமூகத்தில் இருந்து கற்றறிந்த சமுதாயமொன்று உருவாகி உலகளாவிய ரீதியில் மலையக சமூகம் தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்தன் பின்னர் சம்பள பிரச்சினைக்கு அப்பால் இவர்களது அரசியல், சமூக, பொருளாதார, கலாசார உரிமைகளை சில அரசியல் தலைவர்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.

அதில் சமகால அரசியலில் முக்கிய தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திகழ்கிறார். அவரது அனைத்து உரைகளிலும் மலையக மக்களுக்கு ஏனைய சமூகம் போல் சம உரிமைகள் தமது ஆட்சியில் வழங்கப்படும் எனக் கூறுவதுடன், தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றப்படுவார்கள் என்ற வாக்குறுதியையும் வழங்கி வருகிறார்.

அதன் முக்கிய உரையை இன்று தலவாக்கலையில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் அவர் நிகழ்த்தினார். தமிழ் மொழியிலேயே இந்த வாக்குறுதியையும் அவர் வழங்கியுள்ளார்.

வரலாற்றில் மலையக மக்கள் மத்தியில் தென்னிலங்கையில் ஆளும் அல்லது ஆழபோகும் நிலையில் இருக்கும் அரசியல் தலைவர்கள் தமிழில் பேசியதில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, யுத்தம் நிறைவடைந்த தருணத்தில் வடக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்யும் சந்தர்ப்பங்களில் தமிழில் தமது உரையை தொடங்குவார்.

இந்த நிலையில் முதல் முறையாக மலையகத்தில் தமிழில் முழு உரையையும் ஆற்றிய தலைவராக சஜித் பிரேமதாச பதிவாகியுள்ளார்.

ஏனைய சில தலைவர்கள் “வணக்கம்“ உள்ளிட்ட சில வரிகளையே தமிழில் கூறியுள்ளனர். ஆனால், சஜித் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் உரையாற்றி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இவரது உரையில், மலையக மக்கள் இந்த நாட்டின் கௌரவமானவர்கள் என்றும் அவர்கள் தமது ஆட்சியில் சிறுதோட்ட உரிமையாளர்களாகவும் அரசியல், சமூக, கலாசார,கல்வி , சுகாதார மற்றும் ஏனைய உரிமைகளை முழுமையாக பெற்ற மக்களாக வாழ்வார்கள் என்றும் கூறினார்.