பிபிசியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட இலங்கை ஊடகவியலாளர்: 4.5 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்க உத்தரவு

0
53
Article Top Ad

இலங்கை ஊடகவியலாளர் அசாம் அமீனுக்கு 4.5 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்குமாறு பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு (பிபிசி) உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் அசாம் அமீனின் ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவந்த பிபிசியின் முடிவு ‘நியாயமற்றது’ என்று இலங்கை தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதன்படி, நேற்று (ஏப்ரல் 30ஆம் திகதி) எழுத்துப்பூர்வ உத்தரவை வழங்கிய தொழிலாளர் நீதிமன்றம், பிபிசியின் நடவடிக்கைகள் தன்னிச்சையானவை என்று கண்டறிந்தது.

பிபிசிக்கு எதிராக தீர்ப்பளித்த தொழிலாளர் நீதிமன்றம், ஊடகவியலாளர் அசாம் அமீனுக்கு 4.5 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் அசாம் அமீன் கலந்துரையாடிய குரல் பதிவு ஒன்றை சிங்களே அமைப்பு வெளியிட்டிருந்த நிலையில், அசாம் அமீன் 2020 ஆம் ஆண்டு பிபிசியில் இருந்து பதவி விலக்கப்பட்டிருந்தார்.

இதனால் ஒப்பந்தம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டமை நியாயமற்றது என்று அமீனின் சட்டத்தரணிகள் வாதிட்டனர். இந்த வழக்கில் பிபிசி சார்பில் இலங்கையில் உள்ள அதன் சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

ஊடகவியலாளர் பிபிசியின் கீழ் கடந்த பத்து வருடங்களாக கறைபடாத சேவைப் பதிவைக் கொண்டிருந்ததாகக் குறிப்பிடுவதாகத் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

அத்துடன், குற்றம் சாட்டப்பட்ட தவறான நடத்தைக்கான காரணத்தைக் காட்ட வாய்ப்பளிக்கப்படாமல் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.