”நாஜிக்கு நடந்ததை மேற்குலகம் மறந்துவிட்டது”: ரஷ்யா எதற்கும் தயார் 

0
89
Article Top Ad

“மேற்கு நாடுகளே உலகளாவிய மோதலுக்கு காரணமாக இருக்கின்றன.” என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப்போரில் நாஜி படைகளை வெற்றிக்கொண்டு 79ஆம் ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை சிவப்பு சதுக்கத்தில் (Red Square in Moscow) இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பு நிகழ்விலேயே புடின் இவ்வாறு கூறியுள்ளார்.

”இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனிக்கு எதிராக சோவியத் யூனியன் வெற்றிகொண்டது. இது ரஷ்யாவின் வெற்றி. சமகாலத்தில் உலகின் மிகப்பெரிய அணுசக்தியை கொண்டுள்ள ரஷ்யாவை அச்சுறுத்த எவருக்கும் அனுமதியளிக்க மாட்டோம்.

உக்ரைனின் மேற்கத்திய ஆதரவுப் படைகளுக்கு எதிராக ரஷ்ய துருப்புக்கள் முன்னேறி வருகின்றன. ​​நாஜி ஜெர்மனியைத் தோற்கடிப்பதில் சோவியத் யூனியன் ஆற்றிய தீர்க்கமான பங்கை உக்ரைனும் மேற்குலகமும் மறந்துவிட்டது.

உலகம் முழுவதும் மோதல்களை மேற்கத்தேய நாடுகளே தூண்டிவிடுகின்றன. உலகளாவிய மோதலைத் தடுக்க ரஷ்யா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்.

இரண்டாம் உலகப் போரின் படிப்பினைகளை மேற்கு நாடுகள் மறக்க விரும்புகின்றன. நாஜி ஜெர்மனியின் தோல்வியில் ஈடுபட்ட அனைத்து நட்பு நாடுகளையும் ரஷ்யா கௌரவித்திருந்தது.

ஆனால், எங்களை அச்சுறுத்த எவரையும் அனுமதிக்க மாட்டோம். எங்கள் படைகள் எப்போதும் போர் தயார் நிலையில் இருக்கும்.” என்றும் புடின் கடுமையான உரையொன்றை நிகழ்த்தியுள்ளார்.

இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் 27 மில்லியன் மக்களை இழந்தது. ஆனால், இறுதியில் நாஜிப் படைகளை பெர்லினுக்குள் இறுக்கிய ரஷ்யா, அங்கு ஹிட்லரை தற்கொலை செய்துகொள்ளவும் வைத்தது,.

அந்த வெற்றியின் நினைவாகவே 1945 இல் சிவப்பு சதுக்கம் உருவாக்கப்பட்டது. நாஜி ஜெர்மனியின் நிபந்தனையற்ற சரணடைதல் மே 8, 1945 அன்று இரவு 11:01 மணிக்கு அமலுக்கு வந்தது.

பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இதனை “ஐரோப்பாவின் வெற்றி தினம்” எனக் குறிப்பிட்டன. அத்துடன், மொஸ்கோவில் அது மே 9 ஆம் திகதியாக குறிக்கப்பட்டது. இது சோவியத் யூனியனின் “வெற்றி நாள்” என ரஷ்யர்கள் அழைக்கிறார்கள்.