முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து சபையில் ‘சிரட்டை’யைச் சமர்ப்பித்த சிறீதரன் – நூதனசாலையில் வைக்குமாறு கோரிக்கை

0
62
Article Top Ad

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து ‘சிரட்டை’ ஒன்றை சபாபீடத்துக்குச் சமர்ப்பித்து அதனை நாடாளுமன்ற நூதனசாலையில் வைக்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (13) நடைபெற்ற நிதிக் கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“இந்த மாதம் எமக்கு மிகவும் முக்கியமானது. எமது வேதனைகளை வெளிப்படுத்துகின்றது. நான் இந்தச் ‘சிரட்டை’யைச் சபாபீடத்துக்குச் சமர்ப்பிக்கின்றேன். இதுதான் முள்ளிவாய்க்காலில் எமது மக்களுக்குக் கஞ்சி வழங்கிய சிரட்டை.

அப்போது குடிப்பதற்கு ஒரு உபகரணம் இருக்கவில்லை. கஞ்சி காய்ச்சுவதற்கு அரிசி இருக்கவில்லை. உப்பு இல்லை. தண்ணீர் கூட எடுக்க நிலைமை இருந்தது.

இவ்வாறான நிலைமையில் வெறும் உப்பில்லாத கஞ்சியைக் காய்ச்சி இந்தச் சிரட்டையில்தான் எமது மக்கள், குழந்தைகள் குடித்து உயிர் தப்பினார்கள்.

அதனால் முள்ளிவாய்க்கால் அடையாளமாக இந்தச் சிரட்டையைச் சபாபீடத்துக்குச் சமர்ப்பிக்கின்றேன். தயவு செய்து நாடாளுமன்றத்தின் நூதனசாலையில் இந்தச் சிரட்டையை வையுங்கள்.” – என்றார்.