இந்திய மக்களவைத் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) நாடாளுமன்றத்தின் 543 இடங்களை வெற்றிகொள்ள முடியுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
ஐந்தாவது கட்டத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஏற்கனவே 310 இடங்களை கைப்பற்றியுள்ளதாக இந்திய உள்விவகார அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்தார்.
பிரதமர் மோடியின் நெருங்கிய நட்புவட்டமான அமித் ஷா, நாளை (25) மற்றும் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவின் ஆறாவது மற்றும் ஏழாவது கட்டங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தில் கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றிகொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், இறுதி கட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நம்பிக்கை தகர்க்ககூடும் என எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, பாரதிய ஜனதா கட்சியின் கோட்டைகளாக கருதப்படும் இடங்களில் குறைந்தளவு வாக்குப்பதிவு மற்றும் வாக்களிப்பில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி காணப்படுவதாக பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் வாக்குப்பதிவு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி 75 வீதமான தொகுதிகளில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் இருந்தது.
ஆனால், முதல் இரண்டு சுற்று வாக்குப்பதிவுகளுக்குப் பின்னர் ஆய்வாளர்கள் கணிப்பீட்டை 362 ஆக குறைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மோடி எங்கு முகத்தைக் காட்டுகுறாரோ அங்கு வாக்குகள் குறைவடைந்துவிடும் என காங்கிரஸின் ஊடகப் பேச்சாளர் பவன் கேரா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, முதல் நான்கு சுற்று வாக்குப்பதிவுகளில் சராசரியாக 66 வீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், சீரற்ற வானிலை மற்றும் வாக்குப்பதிவு மந்தகதி ஆகியவற்றினால் எஞ்சிய 115 தொகுதிகளில் அந்த எண்ணிக்கை குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.