“தற்போதைய அரசியல் கள சூழ்நிலையில் எவ்வாறு அடித்தாடுவது என்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துவிட்டேன். எனவே, அடித்தாடுவதா? தவறான முடிவெடுத்து ஆட்டமிழப்பதா? என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜூன் 15 ஆம் திகதிக்குப் பிறகு நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது எனவும், ஜனாதிபதி மற்றும் பஸில் ராஜபக்ஷவுக்கிடையில் இது தொடர்பில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது எனவும் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினரான உதயங்க வீரதுங்க விடுத்துள்ள அறிவிப்பு மொட்டுக் கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மொட்டுக் கட்சியின் எம்.பிக்கள் சிலர் பஸில் ராஜபக்ஷவைச் சென்று சந்தித்து, இது தொடர்பில் வினவியுள்ளனர்,
“சேர், நாடாளுமன்றத் தேர்தல் முதலில் நடக்குமென்றால் எங்களுக்கும் சொல்லி விடுங்கள். வேலையை ஆரம்பிக்க வேண்டும்.” – என்று அவர்கள் கூறியுள்ளனர்.
“எனக்கு அது பற்றி தெரியாது. சிலவேளை ரணிலின் தகவலை உதயங்க வெளியிட்டிருக்கலாம். தற்போதைய சூழ்நிலையில் அரசியல் களத்தில் எவ்வாறு ஆட வேண்டும் என்பது பற்றி ரணிலுக்கு விளக்கிவிட்டேன். இனி முடிவெடுக்கும் அதிகாரம் அவரிடம்தான் உள்ளது.” – என்று பஸில் ராஜபக்ஷ, மேற்படி உறுப்பினர்களுக்குப் பதிலளித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் பஸில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.