அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாகிறது நாம் தமிழர்

0
53
Article Top Ad

அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது சீமானின் நாம் தமிழர் கட்சி.

தேர்தல் ஆணைய விதிப்படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற, சட்டப் பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றிப்பெற வேண்டும் அல்லது மக்களவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை தொகுதியில் வெற்றிப்பெற வேண்டும். அல்லது சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். அல்லது மக்களவை தேர்தலில் குறைந்தபட்சம் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும்.

இதற்கிடையில், கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது நாம் தமிழர் கட்சி 6.58 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்றது. இதனால் அக்கட்சியால் அங்கீகாரம் பெற முடியவில்லை. இதனால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அக்கட்சியின் விவசாய சின்னம் பறிபோனது. மேலும் அவர்கள் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை. ‘மைக்’ சின்னம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பெற 8 சதவீத வாக்குகள் தேவை என்ற நிலையில், தற்போது 8.19% வாக்குகளை பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்துக்கு நாம் தமிழர் கட்சி உயர்ந்துள்ளது.

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி மொத்தமாக 8.19% வாக்குகளை பெற்றது. அதேபோல் மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து மொத்தமாக நாம் தமிழர் கட்சி 35.60 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது. மேலும் 12 மக்களவை தொகுதிகளில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக மாறி உள்ளது.