இலங்கையில் செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக இணைய வசதி சேவையை வழங்க “Starlink” நிறுவனத்திற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆரம்ப அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.
இந்த இணைய சேவை வசதிக்கான அனுமதியை வழங்குவதற்கு முன்னர் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னரே தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் இந்த இணைய சேவையை இலங்கையில் நடைமுறைப்படுத்த முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்வி, ஆராய்ச்சி மற்றும் மீன்பிடித் துறைகளுக்கு வேகமான இணையச் சேவையை இதன் ஊடாக வழங்க முடியும் என்றும், உலகில் எங்கிருந்தும் இந்த இணைய வசதியைப் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தோனேசியாவில் அண்மையில் நடைபெற்ற 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட அமர்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உலகப் புகழ்பெற்ற வர்த்தகரான எலோன் மஸ்கை சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது “Starlink” வலையமைப்புடன் இணைப்பதற்கான விண்ணப்ப செயல்முறையை விரைவுபடுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதற்கமைய, செய்மதி தொழில்நுட்பம் மூலம் இணைய வசதி சேவையை வழங்க “Starlink” நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் சுமார் 2000 Starlink (ஸ்டார்லிங்க்) வலையமைப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் 32 நாடுகளில் ஏற்கனவே அதிவேக இணைய வசதி வழங்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் மேலும் குறிப்பிட்டதாவது,
”இன்று முதல் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் இணைந்து செய்மதி தொழில்நுட்பம் மூலம் இணைய வசதிகளைப் பெற்று, தொழில்நுட்பத் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த இருக்கிறோம்.
இதுவரை கோபுரங்கள் ஊடாக வழங்கப்பட்ட குறைந்த அளவிலான இணைய வசதிகளுக்குப் பதிலாக, இந்த செய்மதி தொழில்நுட்ப இணைய வசதி மூலம் எங்கிருந்தும் இணைய வசதியைப் பெற முடியும். இதன் ஊடாக தொழில்நுட்பத் துறையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. மாணவர்கள், ஆய்வாளர்கள், மீனவர்கள் ஆகியோருக்கு இந்த இணையதள வசதி பெரும் வசதியாக உள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் அதிவேக இணைய வசதியை பெற முடியும். ஸ்டெர்லிங்கிற்கு செய்மதி தொழில்நுட்ப இணைய வசதியை வழங்க இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 14 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் 22 ஆவது பிரிவின் கீழ், செய்மதி தொழில்நுட்பத்தின் மூலம் இவ்வாறு இணைய வசதிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. பாடசாலை மாணவர்கள், மீனவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த இணைய சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக நிவாரணப் பொதியை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். எதிர்காலத்தில் அதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டும்” என அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மதுசங்க திஸாநாயக்க,
“starlink” நிறுவனம் இலங்கையில் ஒரு தொலைபேசி வலையமைப்பு நிறுவனமாக நிறுவப்படவில்லை, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் 17 மற்றும் 22 ஆவது பிரிவின்படி இந்த நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டது. எனவே, தற்போதுள்ள தொலைத்தொடர்பு பரிவர்த்தனைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, எதிர்காலத்தில் சேவை அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.
இந்த இணைப்பைப் பெற 400 – 600 அமெரிக்க டொலர்கள் வரை செலவாகும். மாதாந்த கட்டணம் 99 அமெரிக்க டொலர்களாகும். செய்மதி தொழில்நுட்பத்தின் மூலம் வழங்கப்படும் இணைய வசதி மூலம் உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் இணையத்தை அணுக முடியும். இந்த இணைய சேவை இலங்கையில் தற்போதுள்ள பைபர் தொழில்நுட்ப இணைய சேவையை விட பல மடங்கு வேகமானது. எனவே, எதிர்காலத்தில் தொழில்நுட்பத் துறைக்கு சிறந்த சூழல் உருவாகும் என எதிர்பார்க்கலாம்” என அவர் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சின் செயலாளர் கலாநிதி தர்ம ஸ்ரீ குமாரதுங்கவும் கலந்துகொண்டார்.