இலங்கையில் ஜூன் 07 வரை பயணக் கட்டுப்பாடு நீடிப்பு

0
250
Article Top Ad

அத்தியாவசிய கொள்வனவிற்கு மே 25, 31, ஜூன் 04 இல் தளர்வு
– தளர்வின்போது வெளியில் செல்ல விதிமுறைகள்
– போக்குவரத்து இடம்பெறாது
– மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நாடளாவிய ரீதியிலான பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் 07ஆம் திகதி வரை நீடிக்குமென, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் இன்று (24) பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய கடந்த மே 21 இரவு 11.00 மணி முதல் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு, மே 25 அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்பட்டு, பின்னர் மே 25 இரவு 11.00 மணிக்கு அமுல்படுத்தி மே 28 அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படுமென, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்திருந்தார்.

அத்துடன்இ நாடளாவிய ரீதியிலான இரவு 11.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரையான பயணக் கட்டுப்பாடு மே 31 வரை நீடிக்கப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அதில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக ஜூன் 07ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகஇ இராணுவத் தளபதி தெரிவித்தார்.

ஆயினும் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக, இக்காலப் பகுதியில் மே 25, மே 31, ஜூன் 04 ஆகிய தினங்களில் அதிகாலை 4.00 மணிக்கு பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு அன்றையதினம் இரவு 11.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என்பதோடு தொடர்ந்து ஜூன் 07ஆம் திகதி வரை இது தொடர்ச்சியாக அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய மே 28 இல் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் தினங்களில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வீடுகளிலிருந்து தலா ஒருவர் வீதம் மாத்திரமே வெளியில் செல்ல முடியும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இவ்வாறு வெளியில் செல்லும் போது வீட்டுக் அருகில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு நடந்து சென்று பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படாது எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்தார்.

போக்குவரத்து இடம்பெறாது

இதேவேளை, நாளை (25) எந்தவொரு பொதுப் போக்குவரத்து சேவைகளும் இடம்பெறாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவித்துள்ளார்.

மதுபான விற்பனன நிலையங்களுக்கு பூட்டு

அத்துடன் நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் எதிர்வரும் ஜூன் 07ஆம் திகதி வரை மூடி வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.