“சுப்பர் 8“ இற்குள் செல்ல இலங்கை அணிக்கு வாய்ப்பு உள்ளதா?

0
42
Article Top Ad

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற ரி-20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியில் பங்களாதேஷ் அணி இரண்டு விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 124 ஓட்டங்களைப் பெற்றது.

பங்களாதேஷ் அணி 19 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இந்த வெற்றியின் பின்னர் இலங்கை அணியின் சுப்பர் 8 கனவு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை அணி இதுவரை பங்குபற்றிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து D பிரிவில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு வீழ்ந்துள்ளது.

இலங்கை அணிக்கு அடுத்த சுற்றுக்குள் நுழைவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாக உள்ளது. குழுவில் உள்ள மற்ற அணிகளின் வெற்றி தோல்வியிலேயே இலங்கை அணியின் உள்நுழைவு உள்ளதுடன், அடுத்துவரும் போட்டிகளில் அதிக ஓட்ட மற்றும் விக்கெட்டுகள், ஓவர்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற வேண்டும்.

குறிப்பாக இலங்கை அணி சுப்பர் 8 சுற்றுக்குச் செல்ல அடுத்துவரும் இரண்டு போட்டிகளிலும் பங்களாதேஷ் அணி தோல்வியடைய வேண்டும்.

ஆனால், D பிரிவில் இலங்கையை வெற்றிகொண்டதன் மூலம் பங்களாதேஷ் அணி சுப்பர் 8 சுற்றுக்கு செல்லும் தமது வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

நெதர்லாந்து மற்றும் நேபாள அணிகளை அனுபவம் கொண்ட பங்களாதேஷ் அணி வீழ்த்தும் என்றே கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேப்பிரிவில் பலம்வாய்ந்த அணியாக உள்ள தென்னாபிரிக்கா அணியும் எளிதாக சுப்பர் 8 சுற்றுக்குள் நுழையும் சூழல் உள்ளதால் இலங்கை அணியின் எதிர்பார்ப்பு தோல்வியில் முடிவடையும் சந்தர்ப்பமே அதிகமாக உள்ளது.