2019-லேயே சீன விஞ்ஞானிகளுக்கு கொரோனா அறிகுறிகள்?

0
258
Article Top Ad

கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிக்கத்திலுள்ள சீன அரசானது கொவிட்-19 பெருந்தொற்று குறித்த தகவல்களை அதிகாரபூர்வமாக வெளியிடுவதற்கு சில மாதங்களுக்கு முன்பே வூஹான் வைராலாஜி மையத்தைச் சேர்ந்த மூன்று ஆராய்ச்சியாளர்கள் தங்களுக்கான மருத்துவ உதவிக்காக கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையை நாடியிருக்கின்றனர் என்கிற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த Wall Street Journal ஊடகமானது இதுவரை பொதுவெளியில் வெளியிடப்படாத அமெரிக்கப் புலனாய்வு அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி இந்த முக்கியமான தகவலை வெளியிட்டிருக்கிறது.

எத்தனை ஆராய்ச்சியாளர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டது சரியாக எப்போது அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டது மற்றும் எப்போதெல்லாம் அவர்கள் மருத்துவமனையை நாடினார்கள் என்பது பற்றியும் அந்த அமெரிக்கப் புலனாய்வு அறிக்கை புதிய தகவல்களை அளித்துள்ளதாக  Wall Street Journal கூறியிருக்கிறது.

ஏற்கெனவே கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்திலிருந்துதான் தப்பித்து வந்தது என வதந்திகளும் ஆதாரமற்ற தகவல்களும் பரவிவரும் இவ்வேளையில் இந்த அறிக்கை மீண்டும் அந்த சர்ச்சைக்கு திரி கிள்ளியிருக்கிறது.

மேலும்இ மேற்சொன்ன இந்த அறிக்கையானது உலக சுகாதார அமைப்பு நிபுணர்களின் சந்திப்பு நடைபெறுவதற்கு முதல் நாள் வெளியாகியுள்ளபடியால், கொவிட்-19 பெருந்தொற்றின் மூலம் என்ன என்பது குறித்த விசாரணையின் அடுத்த கட்டம் குறித்து உலக சுகாதார அமைப்பு விரைவில் விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூழல் இப்படியிருக்க வோல் ஸ்ரிட் ஜேர்னல் வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கை குறித்து அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக் கவுன்சலின் செய்தித் தொடர்பாளர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் கொவிட்-19 பெருந்தொற்றின் மூலம் மற்றும் அதன் ஆரம்ப நாள்கள் குறித்து ஜோ பைடனின் அரசானது தொடர்ந்து கேள்விகளை முன்வைக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.

அமெரிக்க அரசானது உலக சுகாதார அமைப்புடன் இணைந்து கொவிட்-19 பெருந்தொற்று பரவத் தொடங்கியத்தைப் பற்றி ஆய்வில் ஈடுபட்டு வந்ததாகவும் அந்த ஆய்வானது அரசியல் மற்றும் பிற தலையீடுகள் எதுவுமில்லாத நடுநிலையான ஆய்வாக இருந்ததாகவும் தேசியப் பாதுகாப்புக் கவுன்சலின் செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவைத் தவிர நோர்வே, கனடா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளும் கொவிட்-19 குறித்த உலக சுகாதார அமைப்பின் ஆய்வை மிக உன்னிப்பாக கவனித்துவருவதாகச் சொல்லப்படுகிறது.

இந்த நோய்த்தொற்றின் மூலம் நோயின் ஆரம்பக்காலம் போன்றவை மட்டுமல்லாது இந்த நோயுடன் தொடர்புடைய மனிதர்கள் மற்றும் விலங்குகள் போன்றவற்றையும் உள்ளடக்கிய விரிவான ஆய்வு அவசியம் என்றும் இந்நாடுகள் தெரிவிக்கின்றன.

இவை அனைத்தும் ஒருபுறமிருக்க இவ்விஷயத்தில் சீனாவின் ஒத்துழைப்பை அமெரிக்கா மிகவும் எதிர்நோக்குகிறது. குறிப்பாக சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது.