இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ள பங்களாதேஷ் அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் பெற்றதையடுத்து மூன்றாவது முறையாகவும் நரேந்திர மோடி பாரதப் பிரதமராக உத்தியோகப்பூர்வமாக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார்.
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்றுள்ள நிலையில், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, புதிய அரசாங்கத்துடனான உறவை வலுப்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நரேந்திர மோடி மற்றும் ஷேக் ஹசீனா ஆட்சியில் இந்திய-பங்களாதேஷ் உறவுகள் வலுப்பெற்றுள்ளன.
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக கடந்த 8ஆம் திகதி இந்தியா வந்த பங்களாதேஷ் பிரதமர் இன்று தனது பயணத்தை நிறைவு செய்துக் கொள்ளவுள்ளார்.
குறித்த பயணத்தின் போது அவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியாவின் புதிய அரசாங்கத்தின் பல அமைச்சர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினார்.
இந்நிலையில், ஷேக் ஹசீனா எதிர்காலத்தில் உறவுகளை வலுப்படுத்த புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று புதுடில்லியில் நடைபெற்றது.
அதன்போது , இலங்கையில் செயற்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு பங்களாதேஷ் ஆதரவளிக்கும் என்று பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இன்று (10) இந்தியாவின் புதுடில்லியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போது உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.