டி20 உலகக் கிண்ணம் இலங்கைக்கு உணர்த்துவது என்ன?

0
60
Article Top Ad

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக்கிண்ணத் தொடரில் முதல் சுற்றிலேயே பல ஜாம்பவான் அணிகள் வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

மறுபுறும் சில புதிய அணிகள் சுப்பர் 8 சுற்றுக்குள் உள்நுழைய உள்ளன.

ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகளில் நேற்று அமெரிக்க அணியை வெற்றிகொண்டதன் மூலம் இந்திய அணி சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிப்பெற்றுள்ளது.

ஆனால், பாகிஸ்தான் அணியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அணிகளுக்கு தலா ஒரு ஒரு போட்டி வீதம் எஞ்சியுள்ளன. ஆனால், இரண்டு வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது.

போட்டிப்போடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது

பாகிஸ்தான் அணி ஒரு வெற்றியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா வெற்றிபெற்றால் இலகுவாக சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துவிடும். பாகிஸ்தான் வெற்றிபெற்றால் இரு அணிகளினதும் ஓட்ட எண்ணிக்கை கணிக்கப்பட்டு ஒரு அணி தகுதிப்பெறும்.

ஆனால், அமெரிக்க அணிக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதால் பாகிஸ்தான் அணி சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிப்பெறுவது கடினமாகும் என கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று பி பிரிவில் அவுஸ்ரேலியா அணி சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது. ஆனால், அதேப்பிரிவில் உள்ள ஜாம்பவான் அணியான இங்கிலாந்து அணி ஸ்கொட்லாந்து அணியுடன் போட்டிப்போடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

புள்ளிப்பட்டியலில் 5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ள ஸ்கொட்லாந்து அணிக்கு அவுஸ்ரேலிய அணியுடன் ஒரு போட்டி எஞ்சியுள்ளது. ஒரு புள்ளியுடன் மூன்றாவது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணிக்கு 2 போட்டிகள் எஞ்சியுள்ளன.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன

இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் இங்கிலாந்து அணி 5 புள்ளிகளை பெறும். ஸ்கொட்லாந்து அடுத்த போட்டியில் தோல்வியுற்றாலும் ஓட்ட கணிப்பின் பிரகாரம்தான் இங்கிலாந்தா ஸ்லொட்லாந்தா என தீர்மானிக்கப்படும்.

சி பிரிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெற அதிகளவான வாய்ப்புகள் உள்ளன. நேற்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகளுடனான தோல்வியின் மூலம் நியூசிலாந்து அணிக்கு சுப்பர் 8 சுற்றுக்குச் செல்வது கடினமாகியுள்ளது.

டி பிரிவில் தென்னாபிரிக்க அணி சுப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. நெதர்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் உள்ள ஜம்பவான் அணியான இலங்கை அணி சுப்பர் 8 வாய்ப்பை இழந்துவிட்டது.

இதனால் இலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட ஐசிசி தரப்பட்டியலில் உள்ள முக்கிய அணிகள் கத்துக்குட்டி அணிகளிடம் தோல்வியடைந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

ஐசிசி தரப்பட்டியலில் இல்லாத அல்லது புதிதாக இணைந்துள்ள அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, ஸ்கொட்லாந்து அணிகள் அண்மைக்காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன.

பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்

ஆனால், உலகக்கிண்ணம், ரி20 உலகக்கிண்ணம் உட்பட பல்வேறு சர்வதேச கிண்ணங்களை வெற்றிக்கொண்ட இலங்கை போன்ற அணிகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையில் நிலவு அரசியல் தலையீடுகள் மற்றும் தகுதியான வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இலங்கை அணி படுதோல்விகளை சந்தித்து வருகிறது.

ரி20 உலகக்கிண்ணத்தின் ஊடாக வேனும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையும் விளையாட்டு அமைச்சும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

கிரிக்கெட் விவகாரம் தொடர்பில் ஆராய அமைச்சர் அலி சப்ரி தலைமையில் நியதிக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை ஜனாதிபதியிடம் அண்மையில் கையளித்திருந்தது.

இந்த அறிக்கையில் இலங்கை கிரிக்கெட்டை மறுசீரமைக்க வேண்டிய கட்டாயத் தேவை வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், உடனடியாக நீண்டகால மறுசீரமைப்புகளுக்கு செல்ல வேண்டியதன் தேவையை அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.