உலகளாவிய ரீதியில் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையை கொண்டாடும் மக்களுக்கு உலகத் தலைவர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிகளவான இஸ்லாமிய மக்களைக் கொண்ட பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவரும் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர்.
போரினால் முகாம்களில் வசிக்கும் மக்கள் இறுக்கமான மனநிலையுடன் ஹஜ் பெருநாளை கொண்டாடும் நேரம் இது.
மேலும் தற்காலிகமாக இஸ்ரேல் போரை நிறுத்தியுள்ளதால் மக்கள் சற்று ஆசுவாசமாக இருக்கின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் காசாவில் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என தீவிரமாக வலியுறுத்தி வருகின்றார்.
மேற்படி ஹஜ் பண்டிகையை முன்னிட்டு முக்கியமான வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார் பைடன்.
அதில் கூறியிருப்பதாவது, “இஸ்ரேல் – ஹமாஸ்க்கு இடையிலான போரை நிறுத்துவதற்கு இதுதான் சரியான தருணம். இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போரை 3 கட்ட பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பதை நான் ஆணித்தரமாக நம்புகிறேன்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரு தரப்பினரும் இதற்கு உடன்பட்டு போரை நிறுத்த வழி செய்ய வேண்டும். இந்த பக்ரீத் நன்னாளில் காஸாவில் தற்காலிகமாக நிலவி வரும் அமைதி நிரந்தரமானதாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.