சூப்பர் 8 சுற்று – கடும் போட்டி : அரையிறுதியில் இந்தியா எந்த அணியுடன் மோதும்?

0
64
Article Top Ad

கரீபியனில் நடந்து வரும் ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் குழு 2 இல் இருந்து தங்கள் இடங்களை உறுதி செய்துள்ளன.

பார்படாஸில் அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்தும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்துள்ளன.

தற்போது இந்த இரு அணிகளும் தங்கள் அரையிறுதிப் போட்டியாளர்களுக்காகக் காத்திருக்கின்றன.

மேலும் ஒரு அணி டிரினிடாட்டிற்கும் மற்றொன்று கயானாவுக்கும் பயணிக்கும் என்பதால் அந்தந்த போட்டிகள் உறுதிப்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், குழு ஒன்றில் இருந்து அரையிறுதிப் போட்டிக்கு எந்த அணிகளும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. நிகர ஓட்ட வீதம் +2.425 உடன் நான்கு புள்ளிகளுடன் இந்தியா குழு ஒன்றில் முதலிடத்தில் உள்ளது.

குழு இரண்டைப் போலவே குழு ஒன்றிலும் இரண்டாவது இடத்தை பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தை கைப்பற்ற மும்முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

சூப்பர் 8 சுற்றில் குழு ஒன்றில் தற்போதைக்கு இந்திய முதலிடத்தில் உள்ளது. அவுஸ்திரேலியா +0.223 நிகர ஓட்ட வீதத்துடன் இரண்டாம் இடத்திலும், -0.650 நிகர ஓட்ட வீதத்துடன் ஆப்கானிஸ்தான் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

இரு அணிகளும் தற்போது இரண்டு புள்ளிகளுடன் உள்ளன, சூப்பர் 8 சுற்றில் எஞ்சியுள்ள ஒவ்வொரு போட்டிகளில் வெற்றிபெற்றால் இந்த இரு அணிகளும் தலா நான்கு புள்ளிகளை பெற்றுக்கொள்ளும்.

எனினும் அந்த அணிகளின் தரவரிசையை நிகர ஓட்ட வீதமே தீர்மானிக்கும். அதேபோல் இந்திய அணியின் தரவரிசையிலும் சில நேரங்களில் மாற்றம் ஏற்படும்.

ஒருவேளை குழு ஒன்றில் இந்தியா முதலிடம் பிடித்தால் குழு இரண்டில் இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணியுடன் அரையிறுதியில் மோதுவார்கள்.

தற்போது குழு இரண்டில் இங்கிலாந்து இரண்டாம் இடத்தில் உள்ளமையால் சில நேரங்களில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்ள நேரிடும்.

இந்தியாவின் நிகர ஓட்ட வீதத்தை அவுஸ்திரேலியா மிஞ்சினால், அரையிறுதியில் ஆஷஸ் போராக இருக்கும், மேலும் இந்தியா தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள நேரிடும்.