ரஷ்யா செல்லும் மோடி: உற்றுநோக்கும் அமெரிக்கா

0
30
Article Top Ad

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஜூலை மாதம் ரஷ்யா செல்ல உள்ளார்.

2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விளாடிவோஸ்டோக்கில் நடைபெற்ற கிழக்குப் பொருளாதார மன்றத்தில் மாநாட்டில் கலந்துகொள்ளவே மோடி, கடைசி ரஷ்யாவுக்குச் சென்றிருந்தார்.

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாகவும் மோடி பதவியேற்றிருந்தபோது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே மோடி ரஷ்யாவுக்குச் செல்ல உள்ளார்.

வருடாந்திர இந்தியா-ரஷ்யா உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளவே மோடி இம்முறை ரஷ்யா செல்கிறார்.

2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இந்திய விஜயத்தின் போது வருடாந்திர இந்தியா-ரஷ்யா உச்சிமாநாட்டை நடத்த இருநாடுகளும் இணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டன.

இதன் பிரகாரம் இந்த மாநாடு இந்தியா மற்றும் ரஷ்யாவில் மாறி மாறி நடைபெற்று வருகிறது.

கடந்த உச்சிமாநாடு 2021 டிசம்பரில் புதுடில்லியில் நடைபெற்றது. இதில் புடின் கலந்து கொண்டார்.

கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் 2022 இல் ரஷ்யா-உக்ரைன் மோதல் தொடங்கிய பின்னர் மோடியின் முதல் ரஷ்யா பயணம் இதுவாகும்.

இந்த நிலையில் மோடியின் ரஷ்ய பயணத்துக்கு மேற்கத்தேய எதிர்ப்புகளும் கிளர்ந்துள்ளன.

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிரான நகர்வுகளில் மேற்கத்தேய நாடுகள் ஈடுபட்டுவரும் இந்தத் தருணத்தில் இந்தியா அதன் ஈடுபாட்டை ரஷ்யாவுடன் குறைத்துக்கொள்ள வேண்டுமென அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், இந்தியா அதனை கண்டுகொள்வதில்லை என்பதுடன், ரஷ்யாவுடன் இந்திய ரூபாயில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தில் இந்த விடயம் பிரதான பேசுபொருளாக இருக்கும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.