கென்யாவில் கலவரம் – 27 பேர் உயிரிழப்பு!

0
46
Article Top Ad

கென்யாவில் அரசுக்கு எதிராக இடம்பெற்ற கலவரத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

கென்யாவில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் வரியை உயர்த்தப் போவதாக அந் நாட்டின் அரசு அறிவித்திருந்தது.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் வரி உயர்வு சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டு சட்டம் நிறைவேற்றப்படவிருந்தது. இந்த தீர்மானத்தை எதிர்த்து நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி நேற்று கென்யா நாடாளுமன்றத்தில் வரி உயர்வு சட்டமூலம் மீதான விவாதம் நடந்து கொண்டிருந்த போது ஆயிரக்கணக்கான மக்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு, அங்கிருந்த தடுப்புகளையும் உடைத்துக்கொண்டு உள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன் நாடாளுமன்ற கட்டிடத்துக்கு தீ மூட்டப்பட்டது. கட்டிடடத்தில் தீ வேகமாக பரவியதையடுத்து போராட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாத காரணத்தால், போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கென்ய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரி உயர்வு சட்டமூலம் திரும்ப பெறப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.