தென் ஆபிரிக்க அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கட் இறுதியாட்டத்தில் இந்திய அணி இறுதிநேரம் வரை கடுமையாகப் போராடி அபார வெற்றியை ஈட்டியது. 2007ம் ஆண்டு தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற முதலாவது உலகக்கிண்ண வெற்றி ஈட்டிய பின்னர் 17 வருட இடைவெளிக்குப் பின்னர் இந்தியா ஈட்டிய இந்த வெற்றி மனது மறக்காத மகத்தான வெற்றியாக அமைந்தது.
2008ம் ஆண்டில் இந்தியாவில் ஐபிஎல் தொடர் ஆரம்பமாகி 17 வருடங்கள் ஆன பின்னர் கிடைத்த முதல் வெற்றி என்பதால் இந்த வெற்றிக்குப் பின்னர் கிரிக்கட்டின் மவுசு இன்னமும் அதிகரிக்கப்போகின்றது. இந்த உலகக்கிண்ணப் போட்டியின் அட்டவணை ,போட்டிகளின் நேரம் ,மைதான ஒதுக்கீடு, தங்குமிட வசதி, பயண வசதி ஏற்பாடு என அனைத்திலும் இந்திய அணிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாக ஏற்கனவே விமர்சனங்களும் சர்ச்சைகளும் உள்ளன.
நேற்றைய இறுதிப்போட்டியில் சூர்ய குமார் யாதவ் கடைசி ஓவரின் முதல் பந்தில் எடுத்த பிடி தொடர்பாகவும் சர்ச்சைகள் உள்ளன. 2011 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து ஏற்பட்ட சர்ச்சைகளே இன்னமும் தீராத வேளையில் இந்த சர்ச்சைகள் ஒன்றும் புதிதல்ல. என்ன சர்ச்சைகள் இருப்பினும் விமர்சனங்கள் இருப்பினும் கடந்த ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக இந்திய அணி அனைத்து தரப்பு கிரிக்கட்டிலும் வலுவான அணியாக திகழ்ந்து வருகின்றது என்பதை மறக்க முடியாது. 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கிண்ணத்தை வென்ற பின்னர் இந்திய அணியின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது.
2013ம் ஆண்டில் சம்பியன்ஸ் கிண்ணம் 2014ம் ஆண்டில் T20 உலகக்கிண்ண இறுதிப் போட்டி, 2015ம் ஆண்டு 50 ஓவர்கள் உலகக்கிண்ண அரையிறுதி ,2016ம் ஆண்டில் T20 உலகக்கிண்ண அரையிறுதி, 2019ம் ஆண்டில் 50 ஓவர்கள் உலகக்கிண்ண அரையிறுதி ,2022 ம் ஆண்டில் T20 உலகக்கிண்ண அரையிறுதி 2023ம் ஆண்டில்,50 ஓவர்கள் உலகக்கிண்ண இறுதிப் போட்டி என மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளிலும் 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகள் டெஸ்ட் சம்பியன்ஸிப் இறுதிப் போட்டிகள் என இந்திய அணியின் ஆற்றல் வெளிப்பாடு தொடர்ச்சியாக முன்னணியில் இருந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த உலகக்கிண்ண போட்டிகளில் வெற்றி பெற்றமை ஆச்சரியம் அளிக்கவில்லை.
ஒரு அணி தொடர்ச்சியாக அரையிறுதி அன்றேல் இறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகும் அளவிற்கு விளையாட்டில் ஆற்றல் வெளிப்பாடுகளைக் காண்பிக்கின்றதென்றால் அது வெற்றி பெறுவதற்கான சந்தர்பங்கள் அதிகரிக்கும் என்பது வெள்ளிடை மலையாகும். இந்தியா இப்படி முன்னணியில் திகழ்வதற்கு அண்மைக்காலமாக சகல மட்டங்களிலும் தரமான வீரர்கள் உருவாகிவருவது முதன்மையானது. இந்திய அணியின் வீரர்களின் உடற்திடநிலை ,உளத்திட நிலை என்பன உயரிய மட்டத்தில் இருப்பதாலேயே அனைத்து நிலைகளிலும் இருந்து மீண்டு வரமுடிகின்றது. இதற்கு நேற்றைய போட்டி ஒரு உதாரணம்.