இலங்கையில் பணவீக்கம் 1.7 வீதமாகக் குறைக்கப்படுவது மிகவும் நல்ல மற்றும் மகிழ்ச்சியான சூழ்நிலையாக இருந்தாலும், இலங்கையின் நுகர்வோருக்கு தகுதியான நிவாரணம் ஏன் பெறப்படவில்லை என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம் அறிவித்துள்ளது.
அதன் செயலாளர் நாயகம் சுனில் ஜயசேகர விடுத்துள்ள அறிக்கையில், உலகில் எந்தவொரு சமூகத்திலும் சிறந்த மேலாண்மை மற்றும் ஒழுங்குமுறை பொறிமுறைகளைப் பேணினாலும், பணவீக்கம் குறைந்து வரும் சூழ்நிலையில், நிவாரணம் நுகர்வோருக்குச் செல்வது உறுதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், துரதிஷ்டவசமாக, இலங்கையில் பல நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் இறக்குமதிச் செலவு மற்றும் விற்பனை விலை ஆகியவற்றுக்கு இடையே பெரிய இடைவெளி இருப்பதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், அந்த அறிக்கையில்,
“சில பொருட்களுக்கு இடையேயான இடைவெளி 100 வீதம் தொடக்கம் முதல் 200 வீதம் வரை மிக அதிகமாக இருப்பதைக் காணலாம். இது மிகவும் நியாயமற்ற நிலையாகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட நிறுவனங்கள் தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் நிறைவேற்றாததும், நாட்டின் பொறுப்பான திணைக்களங்கள் நியாயமான விலை பொறிமுறையை உறுதி செய்ய ஸ்தாபிக்கப்பட வேண்டிய ஒழுங்குமுறை மற்றும் மத்தியஸ்த பொறிமுறைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தாமையே இந்த நிலைமைக்குக் காரணம் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
எனவே, பொறுப்புள்ள நிறுவனங்கள் இது குறித்து உடனடியாக கவனம் செலுத்தி, நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சந்தையை செயல்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.