ஆளுங்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் இதுவரை உறுதியான முடிவுகள் எதுவும் எட்டப்படாத சூழலில் எதிர்வரும் 25ஆம் திகதி தமது ஜனாதிபதித் வேட்பாளர் யார் என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவிக்க உள்ளதாக அறிய முடிகிறது.
எதிர்வரும் 17ஆம் திகதி நள்ளிரவுடன் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான முழுமையான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்க உள்ளது.
பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தியும், தேசிய மக்கள் சக்தியும் தமது ஜனாதிபதி வேட்பாளர்களை அறிவித்துள்ள பின்புலத்தில் ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுனவில் உட்கட்சி பூசல் காரணமாக ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.
பொதுஜன பெரமுனவின் அமைச்சரவை அமைச்சர்களில் பெரும்பாலானவர்களும் கட்சியில் ஒரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச ஆகியோர் ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக முன்னிறுத்துவதில் தயக்கம் காட்டிவருகின்றனர்.
பிரபல வர்த்தகர் தம்மிக பெரேராவை வேட்பாளராக நிறுத்தும் நிலைப்பாட்டில் இவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
ரணில் விக்ரமசிங்கவிடம் பொதுஜன பெரமுன முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளை அவர் நிராகரித்தமை மற்றும் பொதுஜன பெரமுனவின் நிபந்தனைகளுக்கு இணங்காமை உள்ளிட்ட காரணிகளால் அரசாங்கத்துக்குள் கடுமையான பிளவுகள் ஏற்பட்டுள்ளன.
பிளவுகளை சரிசெய்யும் நோக்கில் ரணில் விக்ரமசிங்கவுக்கும் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவந்த போதிலும் அவற்றில் சுமூகமான இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கொழும்பில் உள்ள ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் ரணில் விக்ரமசிங்க, பசில் ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட பொதுஜன பெரமுனவினதும் ஐக்கிய தேசியக் கட்சியினதும் முக்கிய உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தல், ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் பொதுத் தேர்தல் குறித்து இதன்போது ஆழமான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் இடம்பெற்றதாகவும் பசில் ராஜபகச் பல்வேறு நிபந்தனைகளை இதன்போது முன்வைத்தாகவும் தெரியவருகிறது.
என்றாலும், ரணில் விக்ரமசிங்கவின் தரப்பு பசிலின் நிபந்தனைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரியவருவதுடன், மீண்டும் அடுத்தகட்ட பேச்சுகளில் பல்வேறு இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கில் பேச்சுகளை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர்.
இவ்வாறான பின்புலத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி பொதுஜன பெரமுன தமது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க தீர்மானித்துள்ளது. ரணில் விக்ரமசிங்க நிபந்தனைகளுக்கு இணங்காவிடின் தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
தம்மிக்கவின் அரசாங்கத்தில் பிரதமராக நாமல் ராஜபக்சவை நியமிப்பதற்கான இணக்கப்பாடுகள் ஏற்கனவே எட்டப்பட்டுள்ளன. இதனால் எதிர்வரும் 25ஆம் திகதிவரை பொதுஜன பெரமுன ரணிலுக்கு காலக்கெடு விதித்துள்ளதாகவே அக்கட்சியின் வட்டாரங்களில் பேசப்படுகிறது.