அதிகாரத்தை தக்கவைக்க இறுதி முயற்சி: “22 ஐ“ கையில் எடுக்கும் ரணில்

0
41
Article Top Ad

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது ஜனாதிபதி பதவியை தக்கவைத்துக்கொள்ள அல்லது தேர்தலில் வெற்றிபெற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக ஆளுங் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

அரசியலமைப்பின் 83 (ஆ) யின் திருத்தத்திற்கு அமைச்சரit தனது கொள்கை ரீதியிலான அங்கீகாரத்தை வழங்கியிருந்தது.

ஜனாதிபதியின் பதவிக்காலம் “ஆறு ஆண்டுகளுக்கு மேல்“ என்ற வார்த்தையை “ஐந்து ஆண்டுகளுக்கு மேல்” மாற்றும் வகையிலான தீர்மானத்துக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதனை 22வது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும்.

அது மட்டுமின்றி, அது செல்லுபடியாகும் வகையில் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கிலும் பொது வாக்கெடுப்பொன்றை நடத்தும் நோக்கில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ரணில் விக்ரமசிங்க கையில் எடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

ஜனாதிபதி தேர்தலை அழைக்காமல் சர்வஜன வாக்கெடுப்புக்கு ரணில் விக்ரமசிங்க சென்று அந்த வாக்கெடுப்பு தோற்கடிக்கப்பட்டால் அரசியலமைப்பின் பிரகாரம் இன்னும் ஒரு வருடத்திற்கு ரணில் ஆட்சியில் இருப்பார்.

இந்த நடவடிக்கை தோல்வியடையும் ஒரே ஒரு சந்தர்ப்பம் 22ஆவது திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படாவிட்டால் மாத்திரமே.

இந்த நடவடிக்கை வெற்றிபெறாவிட்டால் நாடாளுமன்றத்தை கலைக்க ரணில் விக்ரமசிங்க தயாராக இருப்பதாகவும், ஜனாதிபதி தேர்தலை நடத்த உத்தேசித்துள்ளதாகவும் அரச தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் தோல்வி, பயம் காரணமாகவே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள சட்டத்தரணிகள் கூட்டமைப்பு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

இம்முயற்சியின் காரணமாக இலங்கை இரண்டு தேசியத் தேர்தல்களின் சுமையை சுமக்க நேரிடும் எனவும் அதிகார தாகம் நாட்டில் குழப்பமான சூழ்நிலையை உருவாக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.

பொது வாக்கெடுப்பு நடத்துவது என்பது பல கோடி ரூபாய் செலவாகும் செயலாகும். உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை என அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளதாகவும் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதில் அரசாங்கத்தின் கடைசி துருப்புச் சீட்டு 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் எனவும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சரத்து 83 (ஆ) உள்ளிட்ட மூன்று சரத்துக்களுடன் முரண்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் நேற்று (17) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

22 அரசியலமைப்பு திருத்தத்தை அவசர சட்டமூலமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாது எனவும் அரசியலமைப்பின் உட்பிரிவு 122(3) இல் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாகவும் ஜி. எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார்.