அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தலை இம்மாத இறுதிக்குள் அறிவிப்பதில் எவ்வித தடையும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுவதை உறுதிசெய்து, தேர்தல் நடைமுறைகளுக்கான சட்ட மற்றும் நடைமுறைத் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உறுதிப்படுத்தினார்.
22ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.
ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான அரசியலமைப்பின் 83 (ஆ) சரத்தில் ’06 வருடங்களுக்கு மேல்’ என்ற சொற் தொடருக்கு பதிலாக ’05 வருடங்களுக்கு மேல்’ என்ற வார்த்தை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரை வர்த்தமானியில் வெளியிடுவதை தவிர்க்குமாறு நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவால் நீதி அமைச்சின் செயலாளருக்கு நேற்று வியாழக்கிழமை பணிப்புரை விடுக்கப்பட்டது.
ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் நிலவும் நிச்சயமற்ற தன்மையை நீக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.
நீதியமைச்சர் வர்த்தமானி அறிவித்தலை நிறுத்தி வைத்த போதிலும் ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி அதிரடியாக வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.
இதன்பின்னர் தேர்தல் நடைபெறுமா என மேலும் சந்தேகங்கள் எழுந்தன. இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலை இம்மாத இறுதிக்குள் அறிவிப்பதில் எவ்வித தடையும் இல்லை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.