ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்பது தொடர்பில் இலங்கையில் நிச்சயமற்ற பல கருத்துகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்துவரும் நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் இதுதொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டன.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமா என விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தன தேரர்,
”சமகால ஜனாதிபதியை நியமித்துள்ளது மக்கள் அல்ல நாடாளுமன்றம்தான். அதனால் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியில் உள்ள அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. நாட்டில் ஜனநாயகம் இல்லாவிட்டால் அது மிகவும் பாரதூரமானது.
மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாகாண சபை தேர்தல் நடைபெறுமா இல்லையா அல்லது மாகாண சபைகள் அவசியமா இல்லையா என்ற நிலை உருவாகியுள்ளது.
தேர்தல் முறை மாற்றம் என்ற பேரிலேயே மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைத்ததாக அப்போதைய அரசாங்கம் கூறியது. ஆனால், அப்போதைய அமைச்சரின் தீர்மானத்துக்கு அமைய மாகாண சபைத் தேர்தலை ஜனாதிபதி பிற்போட்டியிருந்தார்.
இன்றுவரை மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் பேசப்படவில்லை. ஆளுநர்கள் மூலம் மாகாண சபைகள் நிர்வகிக்கப்படுகின்றன. பொருளாதார நெருக்கடி மற்றும் போதிய நிதி இல்லாததால் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறுகிறார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நாட்டில் நிச்சியமற்ற நிலை தோன்றியுள்ளது. தேர்தல் நடைபெறுமா இல்லையா என்பதை அரசாங்கம் கூற வேண்டும். உரிய தினத்தில் தேர்தல் நடத்தப்படுமா அல்லது பிற்போடப்படுமா என்பதையும் அரசாங்கம் கூற வேண்டும்.
இது இறுதி நாடாளுமன்ற அமர்வாக கூட இருக்கலாம். 1983 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தீர்மானத்தை போன்றதொரு தீர்மானமே எடுக்கப்பட உள்ளது. இதனால் நாட்டில் இரத்த ஆறே ஓடும். அன்று 64ஆயிரம் பேர் உயிரிழந்திருந்தனர் என்பதை நினைவுற விரும்புகிறேன்.” என்றார்.
இதன்போது குறுக்கிட்ட நிமல் லன்சா எம்பி,
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறாது என்றும் ஜனாதிபதித் தேர்தல் உரிய காலப்பகுதியில் நடைபெறும் என்றும் ஜனாதிபதி நேற்று தெளிவாக கூறியிருந்தார்.
இவ்வாறான பின்புலத்தில் மக்களை குழப்ப பொயை சோடிக்கின்றனர். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்றிருந்த சந்தர்ப்பத்தில் நாடு தீவைக்கப்பட்ட தருணத்தில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் இருந்தவர் ரத்தன தேரர். ஆகவே உறுதியாக ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்.
இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர,
உரிய தினத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும். இவ்வாரம் தேர்தல் திகதியை அறிவிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார். அரசாங்கம் என்ற ரீதியில் தேர்தலில் தலையிட மாட்டோம். தேர்தல்கள் ஆணைக்குழு உரிய காலத்தில் கட்டாயம் தேர்தலை நடத்தும். அதற்கான நிதியையும் வழங்கியுள்ளோம்.
நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்பதையும் கூறுகிறோம். அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை நாடாளுமன்றத்திற்கு ஆயுட்காலம் உள்ளது. மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யோசனையொன்றை முன்வைத்துள்ளார். அதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என பதிலளித்தார்.