பொலிஸ் மா அதிபர் விவகாரம்: தேசபந்துவை நியமிக்க கோரி கொழும்பில் பேரணி

0
35
Article Top Ad

தேசபந்து தென்னகோனை மீண்டும் பொலிஸ் மா அதிபராக நியமிக்கக் கோரி கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அகலகட சிறிசுமண தேரர் உட்பட பௌத்த பிக்குகள் குழுவொன்று கொழும்பில் பேரணி ஒன்றை நடத்தியது.

கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பமான பேரணி கொழும்பு – கோட்டையில் உள்ள போ மரத்தை நோக்கி சென்றது.

இந்தப் பேரணியில் வெளிநாட்டு மற்றும் குழந்தை பிக்குகள் கலந்துகொண்டதையும் காணமுடிந்தது.

போ மரத்தின் அருகே மத வழிபாடுகளை நடத்திய பின்னர், பொலிஸ்மா அதிபரின் பதவிக் காலத்தை நிறைவு செய்வதற்கு உயர் நீதிமன்றம் அனுமதித்திருக்க வேண்டும் என்றும் அந்த குழுவினர் தெரிவித்தனர்.

போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் போது தேசபந்து தென்னகோன்பல்வேறு தடைகள் எதிர்நோக்கியதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதித்து கடந்த 24 ஆம் திகதியன்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 09 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பு வரை இந்த உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.