மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதட்டம்: பதிலடி கொடுக்க தயாராகும் ஈரான், ஹமாஸ்

0
37
Article Top Ad

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பிராந்தியத்தில் கடுமையான போர் பதட்டத்தை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே இன்று புதன்கிழமை அதிகாலை ஈரானில் படுகொலை செய்யப்பட்டதாக பலஸ்தீனிய போராளிக் குழுவும் தெஹ்ரானும் அறிவித்துள்ளன.

காசாவில் போர் மத்திய கிழக்கை உலுக்கியுள்ள நிலையில் பிராந்தியத்தில் இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன.

ஈரானின் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள ஈரான் வந்திருந்த இஸ்மாயில் ஹனியேவை படுகொலை செய்தமைக்கு ஈரான் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன், இஸ்ரேல் மீதான தாக்குதல்களை தொடுக்கவும் வழிசமைத்துள்ளது.

ஏற்கனவே ஈரானின் எல்லைகளில் ஹிஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்திவந்த நிலையில், ஈரானில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டுள்ளமை ஈரானை கடுமையான நகர்வுகளை நோக்கி தள்ளியுள்ளது.

ஹனியேவின் மரணத்தை ஈரானின் புரட்சிகரக் காவல் படை உறுதி செய்துள்ளதுடன், இதுதொடர்பில் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் முதல் காசாவில் போர் உக்கிரமடைந்ததுடன், கடந்த 8 மாதமாக போர் இடம்பெற்று வருகிறது.

ஹமாஸின் ஆயுதப் பிரிவு ஒரு அறிக்கையில் ஹனியேவின் கொலை “போரை புதிய பரிமாணங்களுக்கு கொண்டு செல்லும் மற்றும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளது. அதே நேரத்தில் ஈரானும் பதிலடி கொடுப்பதாக உறுதியளித்துள்ளது.

ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி, “ஈரான் தலைநகரில் நடந்த ஹமாஸ் தலைவரின் மரணத்திற்கு பழிவாங்குவது தெஹ்ரானின் கடமை“ எனக் கூறியுள்ளார்.

ஈரானியப் படைகள் ஏற்கனவே காசா போரில் இஸ்ரேல் மீது நேரடியாகத் தாக்குதல்களை நடத்தியதாக குற்றச்சாட்டுகள் உள்ள பின்புலத்தில் இந்த போர் தற்போது பிராந்திய போராக மாறும் கட்டத்தை எட்டியுள்ளதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

என்றாலும், ஹமாஸ் தலைவரின் மரணம் தொடர்பில் இஸ்ரேல் எவ்வித கருத்தும் வெளியிடவில்லை.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று மாலை 4 மணிக்கு (13.00 GMT) பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின், பதற்றத்தைத் தணிக்க வாஷிங்டன் முயற்சி செய்யும் என்று கூறியுள்ளார். ஆனால் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா உதவும் எனத் தெரிவித்துள்ளார்.

“ஹனியேவின் படுகொலை, பாரதூரமானது” என்று ஹமாஸின் மூத்த அதிகாரி சமி அபு ஸுஹ்ரி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.

பிராந்தியப் போராக இந்த விவகாரம் மாறாமல் இருக்க உலக நாடுகள் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் ஈரான் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுப்பதில் உறுதியாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.