துருக்கி , பாகிஸ்தானில் தேசிய துக்க தினம்: ஹனியேவின் இறுதிச் சடங்கு கத்தாரில்

0
41
Article Top Ad

தெஹ்ரானில் கொலை செய்யப்பட்ட ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் இறுதிச் சடங்குகளை கத்தார் இன்று வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை நடத்த உள்ளது.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்ட நிலையில் துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் அந்நாட்டில் தேசிய துக்க தினத்தை பிரகடனப்படுத்தியுள்ளார்.

அவர் தனது எக்ஸ் தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

“பலஸ்தீனியத்திற்கான எங்கள் ஆதரவையும்,பலஸ்தீனிய உடன்பிறப்புகளுடன் எமது ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் தியாகத்தால் ஒகஸ்ட் 02 ஆம் திகதி தேசிய துக்க நாள் அறிவிக்கப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தானிலும் இன்று தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்மாயில் ஹனியே ஈரானில் நேற்றுமுன் தினம் புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் ஹனியே படுகொலை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.

ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் ஈரான் சென்றிருந்தார். இதன்போது ஹனியேவும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணம் என ஈரான் உள்ளிட்ட நாடுகள் குற்றம் சுமத்தும் நிலையில் இஸ்ரேல் இது தொடர்பில் நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை.