பங்களாதேஷ் வன்முறை: சிறுபான்மையினரின் நிலை தொடர்பில் கண்காணிப்பு

0
36
Article Top Ad

பங்களாதேஷில் உள்ள சிறுபான்மையினரின் நிலை தொடர்பில் கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் பிரதமரின் பதவி விலகல், இந்திய வருகை மற்றும் பங்களாதேஷின் தற்போதைய நிலைமை தொடர்பாக இன்று பிற்பகல் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இந்தியா – பங்களாதேஷ் உறவு என்பது மிகவும் நெருக்கமானது. கடந்த ஜனவரி மாதம் பங்களாதேஷில் தேர்தல் இடம்பெற்றதிலிருந்து குறிப்பிடத்தக்க அளவிலான பதற்றம், ஆழமான பிளவுகள் பங்களாதேஷ் அரசியலில் ஏற்பட்டன.

இந்தப் பின்னணியில் மாணவர்கள் போராட்டம் ஜூன் மாதம் ஆரம்பமானது. இந்தப் போராட்டத்தின்போது வன்முறைகள் ஏற்பட்டன. பொதுக் கட்டிடங்கள், கட்டமைப்புகள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டனக.

இந்த வன்முறை ஜூலை முழுவதும் தொடர்ந்தது. பேச்சுவார்த்தை மூலம் நிலைமையை தணிப்பதற்கு நாம் ஆலோசனை வழங்கினோம்.தொடர்பில் இருக்கும் பல்வேறு அரசியல் கட்சிகளிடமும் இதை வலியுறுத்தினோம். ஜூலை 21 அன்று வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போராட்டத்தை தீவிரப்படுத்தின.

இந்தப் போராட்டம் ஒரே ஒரு இலக்கை கொண்டிருந்தது. அது, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்பதுதான்.

இந்த மாதம் இடம்பெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்ததன் பின்னர் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகினார்.

அவர் இந்தியாவுக்கு வர விரும்புவதாகவும், உடனடி அனுமதியும் கோரப்பட்டது.இதன்பின்னர் நேற்று மாலை அவர் டெல்லி வந்தடைந்தார்.

இராணுவத் தலைமைத் தளபதி ஒகஸ்ட் 05 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். பொறுப்பை ஏற்பதாகவும், இடைக்கால அரசை அமைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களோடு நமது அரசு நமது தூதரகங்கள் மூலம் நெருக்கமான தொடர்பில் இருக்கிறது. 19 ஆயிரம் இந்தியர்கள் அங்கு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் 09 ஆயிரம் பேர் மாணவர்கள். மாணவர்களில் பலர் கடந்த ஜூலை மாதமே இந்தியாவுக்கு திரும்பினர்.

கடந்த 24 மணி நேரத்தில் டாக்காவில் உள்ள அதிகாரிகளோடு நாம் தொடர்பில் இருக்கிறோம். இதுதான் தற்போதைய நிலை. நமது நெருங்கிய அண்டை நாடான பங்களாதேஷில் நிலைமை மேம்படவும், இயல்புநிலைக்கு திரும்பவும் இந்த சபை தனது ஆதரவை வழங்க வேண்டும்” என்றார்.