வரலாற்றை மாற்றியெழுதுமா இலங்கை?

0
48
Article Top Ad

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியானது இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாகும்.

ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஒருபோட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், ஒருபோட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

முதல் போட்டி வெற்றியின்றி முடிவடைந்ததாலும், இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாலும், இந்த போட்டியில் வெற்றி பெறுவது இரு தரப்புக்கும் முக்கியமானது.

இலங்கை அணிக்கு சரித் அசலங்காவும், இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவும் தலைமை தாங்குகின்றனர்.

இதற்கிடையில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 14,000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைக்க இன்னும் 114 ஓட்டங்களே தேவையாகவுள்ளது.

இன்றையப் போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடும் பட்சத்தில் அவர் இந்த சாதனையை முறியடிப்பார்.

இதேவேளை, 1997ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை அணி, இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றியதில்லை.

இந்நிலையில், 27 ஆண்டுகளுக்கு பின்னர் வரலாற்று வெற்றியை நோக்கி இலங்கை விளையாடவுள்ளது.

அதேபோல், இந்த ஆண்டில் இந்திய அணி இறுதி ஒருநாள் போட்டியில் இன்று விளையாடவுள்ளதுடன், தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக 2025ஆம் பெப்ரவரி மாதத்திலேயே இந்திய அணி ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.