ஏழு அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்பின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் சிவில் பிரதிநிதிகள் எழுவருக்கும் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தனித்தனியே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், ஸ்ரீகாந்தா ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்பதென உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதேவேளை, சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் சிவில் தரப்பினர் ஜனாதிபதி பேசுவதற்கு அழைத்த விடயம் சம்பந்தமான தெளிவற்ற நிலைமை காணப்படுவதால் அதுகுறித்து ஆராய்ந்து முடிவெடுப்பதாக அறிவித்துள்ளனர்.
இதேவேளை, சி.வி.விக்னேஸ்வரன் உடல்நலக்குறைவின் காரணமாக இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள முடியாது என ஜனாதிபதி செயலகத்துக்கு அறிவித்துள்ளதோடு தனது கட்சிப் பிரதிநிதியொருவரை அனுப்புவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.