தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடி பயன்படுத்தப்பட்டால் சட்ட நடவடிக்கை: ஆணையாளர் நாயகம் எச்சரிக்கை

0
26
Article Top Ad

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடியை பயன்படுத்தினால் சட்டம் அமுல்படுத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை தொடருமாயின் எதிர்வரும் சில நாட்களில் தேசிய கீதம் கட்சியின் பாடலாக மாறும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வருட ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

இந்த செயலமர்வு பெபரல் அமைப்பின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இங்கு ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவிக்கையில்,

அரசியல்வாதிகளை பார்க்கிறோம் அவர்கள் இல்லாமல் தேர்தல் இல்லை. தேசியக் கொடியின் பெருமை தற்போது இல்லாமற்போய் கொண்டிருக்கிறது.

கிரிக்கெட் போட்டிகளில் தேசியக் கொடியை சுற்றிக்கொண்டு மற்றொரு கையில் மதுபான போத்தைலை வைத்துக் கொண்டு நடனமாடுகின்றனர்.

முறையான அரசியல் கொள்கைகள் இன்மையே இதற்கு காரணம். எனவே, தேர்தல் பிரசாரங்களுக்கு தேசியக் கொடியை பயன்படுத்த வேண்டாம் ” என்றார்.