ஈழத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழா தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
ஓகஸ்ட் 9 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவம், செப்டெம்பர் 2 ஆமிகதி தீர்த்தோற்சவம் மற்றும் கொடியிறக்கத்துடன் நிறைவு காணவிருக்கிறது.
3ஆம் திகதி திருக்கல்யாண பூங்காவனத் திருவிழாவும், மறுநாள் வைரவர் உற்சவமும் நடைபெறவுள்ளது.
கொடியேற்றம் முதல் தீர்த்தத் திருவிழா வரை கோயில்களில் ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் திருவிழாக்களின் தத்துவங்கள் குறித்து சைவ நூல்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன.
இந்தத் திருவிழாக்கள், படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய இறைவனின் ஐந்தொழில்களைக் குறிக்கின்றன.
தேர்த்திருவிழா அழித்தல் தொழிலைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது.
இத்தகைய தேரில் எறிச் சென்றே தேவர்களைக் காப்பதற்காக இறைவன் அசுரர்களை அழித்தார் என்ற தொன்மக் கதையும் இங்கு குறிப்பிடப்படுகிறது.
சித்திரத் தேர் ஒன்றின் சில்லிலிருந்து இறைவன் எழுந்தருளும் பீடம் வரையான பகுதி மூன்று பிரிவாகவோ ஐந்து பிரிவாகவோ வகுக்கப்பட்டு சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
இறைவன் காட்சிதரும் பகுதிக்கு மேலுள்ள சிகரம் ராஜ கோபுர விமானத்தின் மறுவடிவம் போல அழகுறக் காட்சி தரும்.
தேர் அசைந்து சென்று ஓரிடத்தில் நிலைத்தன்மை பெற்றுவிடுவது போல திருக்கோயில்களின் தேரோட்டம் சகல தோஷத்தையும் போக்கி, ஏற்ற இறக்கங்களை நீக்கி நிலையான வாழ்வை தந்துவிடும்.
தேரோட்டம் பார்ப்பவர்கள் அனைவரும் நிலையான வாழ்வை பெற்றுவிடுவர் என்பது ஐதீகம்.
1964 ஆம் ஆண்டு அப்போதைய கோவில் அதிகாரியாக இருந்த சண்முகதாஸ் மாப்பாண முதலியார் ஆலயத்தில் இருந்த தேர் பழுதடைந்த நிலையில், புதிய தேர்த் திருப்பணியை நிறைவேற்றி, தானும் வடம் பிடித்து இழுத்து இரதோற்சவத்தை இன்னும் அழகாக்கினார்.
அந்தத் தேரே இப்போதும் தேர்த்திருவிழா தினத்தில் சண்முகப்பெருமான் ஆரோகணிக்கும் தேராகும்.
தேர்த்திருவிழா நாளில் ஆறுமுகப் பெருமான் கஜாவல்லி, மஹாவல்லி சமேத ஸ்ரீ சண்முகப் பெருமானாக எழுந்தருவது வழமை.
நல்லூர்த் தேர் என்பது யாழ்ப்பாணத்தவர்களுக்கு மட்டுமன்றி தமிழர்கள் வாழும் இடமெங்கும் எழுச்சி மிக்க நாளாகும்.
தேர்த்திருவிழாவை நேரடியாக காணக் கிடைத்தவர்கள் பெரும் பாக்கியம் பெற்றவர்கள்.
நேரடியாகத் தேர்த் திருவிழாவைக் காண முடியாதவர்களும் நேரடி ஒளிபரப்புகளின் வாயிலாக சண்முகப் பெருமானைக் கண்ணாரக் கண்டு களிப்பர்.
ஈழத்து ஆலயங்களில் ‘அபிஷேகக் கந்தன்’ எனப் போற்றப்படும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், ‘அன்னதானக் கந்தன்’ எனப் எனப் போற்றப்படும் செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் ஆகியவற்றின் வரிசையில் ‘அலங்காரக் கந்தன்’ எனப் போற்றப்படுவது நல்லூர் கந்தசுவாமி ஆலயம் ஆகும்.
பெயருக்கேற்றால் போல பெருமை மிகு அலங்காரமும், செழிப்பும் மிக்கவர் நல்லூரில் எழுந்தருளியிருக்கும் வேலவர்.