ரணிலின் தோல்வி உறுதியானதா?: நாடாளுமன்றத்தை கலைக்க உத்தேசம் – கொழும்பு அரசியலில் திருப்பம்

0
14
Article Top Ad

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளர்களில் ஒருவராக கருதப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தோல்வியடையக் கூடும் என கருத்துக் கணிப்புகளில் பரவலாக கூறப்பட்டு வரும் பின்புலத்தில் அவ்வாறு தோல்வியடையும் நிலைமை உருவாகுமானால் நாடாளுமன்றத்தை கலைக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாளை 4ஆம் திகதிமுதல் தபால்மூல வாக்களிப்பு இடம்பெற உள்ளது. தபால் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ரணில் விக்ரமசிங்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

அரச ஊழியர்களுக்கு 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சம்பள உயர்வை வழங்கல், விவசாயக் கடன் தள்ளுபடி, வங்கிகளில் உள்ள நகைக்கான வட்டிகள் குறைப்பு உட்பட பல்வேறு தீர்மானங்களை அரசாங்கம் கடந்த சில நாட்களாக அறிவித்து வருகிறது.

ஆனால், நாட்டு மக்கள் மத்தியில் ஆட்சி மாற்றத்துக்கான வலுவான ஆதரவு ஏற்பட்டுள்ளன. மக்கள் வெளிப்படுத்தும் கருத்துகளால் நிச்சயமாக இலங்கை ஓர் ஆட்சி மாற்றத்தை நோக்கி நகர்வதாக அரசியல் ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பின்புலத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான சில ஆலோசனைகளும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

அவ்வாறு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்ற கலைக்கப்பட்டால் புதிதாக தெரிவாகும் ஜனாதிபதி காபந்து அரசாங்கமாக மாறும் ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையுடன் இணைந்து பணியாற்றும் சூழல் ஏற்படும்.

ஆனால், அரசியலமைப்பின் பிரகாரம் புதிய ஜனாதிபதி தாம் விரும்பும் காபந்து அரசாங்கத்தை அமைப்பதற்கான சந்தர்ப்பம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

என்றாலும், நாடாளுமன்றம் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கலைக்கப்பட்டால் மக்கள் மத்தியில் குழப்பகரமான சூழ்நிலைகள் உருவாகும் என்பதுடன், நாடும் பதற்றமான ஓர் நிலைக்குத் தள்ளப்படும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.