உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதி போட்டி 2025ஆம் ஆண்டு ஜூன் 11 முதல் 15ஆம் திகதி வரை லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
ஜூன் 16ஆம் திகதி ரிசர்வ் நாளாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மூன்றாவது முறையாகவும் 2025இல் நடைபெற உள்ளது.
முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2021இல் இலங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனிலும், இரண்டாவது போட்டி 2023 இல் தெற்கு லண்டனில் உள்ள ஓவல் மைதானத்திலும் நடைபெற்றன.
முதல் முறையாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி உலக புகழ்பெற்ற லோர்ட்ஸ் மைதானத்தில் நடத்தப்பட உள்ளது.
முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது.
இரண்டாவது சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா அணி அவுஸ்திரேலியாவிடம் தோற்றது.
இந்த நிலையிலேயே 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டியிலும் இந்தியா விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
“ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கிரிக்கெட் நாள்காட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக மாறியுள்ளது. 2025 இறுதி போட்டிக்கான திகதிகளை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்று ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் அலார்டிஸ் கூறியுள்ளார்.