இலங்கைத்தீவில் 2009 இடம்பெற்ற போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த, கடத்தப்பட்ட அல்லது வேறு விதத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மிகக் குறைவாக மதிப்பிட்டுள்ளார்.
போர் குற்றங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் தனிப்பட்ட சட்டத்தரணியும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான அலி சப்ரி, ஜேர்மன் தொலைக்காட்சி ஊடகமான ”Deutsche Wela (DW News)’ க்கு வழங்கிய நேர்காணலின் போதே இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம் (OMP) 6,047 பேர் மாத்திரமே காணாமல் போயுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
DW ஊடகவியலாளர், ஒரு இலட்சம் பேர் காணாமல் போயுள்ளதாக அலி சப்ரியிடம் வினவியிருந்தார்.
அதற்கு அலி சப்ரி,
” எங்கிருந்து கண்டெடுக்கப்பட்ட எண்ணிக்கைகள்? யார் கூறியவை? இவை அனைத்தும் பொய். இது மேற்கத்தேய முட்டாள்தனம். ஒரு இலட்சம் என்பது முற்றிலும் பொய். எண்ணிக்கை 6,047 மாத்திரமே” என தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த அலி சப்ரியின் கூற்று புலம் பெயர் தமிழர்களால் கூடுதலாக மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த எண்ணிக்கைகள் நம்பகத்தன்மை அற்றதால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
எனினும், சர்வதேச மனித உரிமை அமைப்பான Amnesty International இன் அறிக்கையின்படி, இந்த எண்ணிக்கை 100,000 ஆகும். 60,000-100,000 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இதுபோன்ற செயல்களில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது என தொடுக்கப்பட்ட மற்றொரு வினாவுக்குப் பதிலளித்த அமைச்சர் அலி சப்ரி, அது புலம்பெயர் தமிழர்களின் மிகைப்படுத்தல் என்றார்.
அதேவேளை வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம், எட்டு வருடங்களுக்கு மேலாக அமைதிப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், OMP ஐ ஒரு மோசடி என நிராகரித்துள்ள நிலையில் Deutsche Welle க்கு வழங்கிய நேர்காணலில், காணாமல் போனவர்களின் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சப்ரி தெரிவித்துள்ளார்.
பலாத்காரமாக காணிகள் கையகப்படுத்துதல் மற்றும் கையகப்படுத்தப்பட்ட காணிகள் மீளப்பெறுதல் ஆகிய சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பாக அமைச்சர் கூறுகையில், 96 வீத காணிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதனை தமிழ் ஆர்வலர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்க மறுப்பதாகவும் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைச் சபையின் 57வது அமர்வு ஜெனீவாவில் ஆரம்பமாவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் சப்ரியின் கருத்துக்கள் வெளி வந்துள்ளன, மேலும் இலங்கை மனித உரிமைகள் நடத்தை பற்றிய விவகாரங்கள் ஆரம்ப நாளான செப்டம்பர் 9 ஆம் திகதி விவாதிக்கப்பட உள்ளன.
இலங்கைத்தீவின் ஒற்றையாட்சி முறையின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள சூழலில் இவ்வாறான சர்ச்சையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 2010ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட தருஸ்மன் தலைமையிலான நிபுணர்குழு இறுப்போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகவும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் காணாமல் ஆக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அதேநேரம் ஜெனீவா மனித உரிமைச் சபையின் வாக்குமூலம் வழங்கிய மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அமரர் இராஜப்பு ஜோசப் இறுதிப் போரில் ஒன்றரை இலட்சம் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
OMP எனப்படும் காணாமல் ஆக்கப்பட்டோரை அறியும் அலுவலகம் 2015ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்துக்கு அமைவாக 2016ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.