18 நள்ளிரவுடன் மௌனகாலம் ஆரம்பம்: ஆட்சியை தக்க வைக்க ரணில் கங்கணம்

0
34
Article Top Ad

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் அரசியல் களத்திலே பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் அரசில் சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன.

வாக்குவேட்டைக்கான பரப்புரையை இன்னும் 2 நாட்கள் மாத்திரமே முன்னெடுக்க முடியும் என்பதால் பிரதான வேட்பாளர்கள் இரவு, பகல் பாராது தீயாக செயற்பட்டுவருகின்றனர்.

இன்னும் 36 மணிநேரத்துக்குள் பரப்புரை போர் ஓய்வுபெறும் நிலையில், சமூகவலைத்தளங்கள் ஊடான பிரச்சாரமும் அசுர வேகத்தில் இடம்பெற்றுவருகின்றது.

இலங்கையில் 1982 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களின்போது காணப்பட்ட அரசியல் சூழ்நிலையைவிட இம்முறை மாறுபட்ட அரசியல் களமே காணப்படுகின்றது.

மக்கள் போராட்டம்மூலம் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் விரட்டப்பட்ட பின்புலத்தில் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.

வழமையாக ஜனாதிபதி தேர்தல்களின்போது இரு முனைபோட்டியே பெரும்பாலும் நிலவும். ஆனால் இம்முறை பலமுனை போட்டி நிலவினாலும் மூவரே பிரதான வேட்பாளர்களாக பலராலும் கருதப்படுகின்றனர்.

அதுமட்டுமல்ல அரியநேத்திரன், நுவான் போபகே, சரத் பொன்சேகா, விஜயதாச ராஜபக்ச, திலித் ஜயவீர போன்ற முக்கிய வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் பிரதான வேட்பாளர்களுக்குரிய வாக்குகள் சிதறக்கூடிய சூழ்நிலையும் காணப்படுகின்றது.

திலகர், அனுசா

அதேபோல வெல்வதற்காக அல்ல சொல்வதற்கு என ஆரம்பத்திலேயே அறிவித்துவிட்டு ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய திலகராஜாவின் பிரச்சார யுக்தியானது, பெருந்தோட்ட மக்களின் அவல நிலைமைகளையும், அவற்றை தீர்க்கவேண்டியதன் அவசியத்துவத்தையும் வலியுறுத்தி நிற்கின்றது.

ஒரு டம்பி வேட்பாளராக அன்றி, ஜனாதிபதி வேட்பாளருக்குரிய வாய்ப்புகளை பயன்படுத்தி மூம்மொழிகளிலும் மக்கள் பிரச்சினையை வெளிக்கொணர்வது சிறப்பு.

ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிவாகை சூடும்பட்சத்தில் அதன் தாக்கம் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்.

சிலவேளை பொதுத்தேர்தலில் மலையக அரசியல் அரங்கம் தேசிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்து களமிறங்கினால் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைப்பதற்குரிய சூழ்நிலையும் இல்லாமல் இல்லை.

( ஜனாதிபதி தேர்தலில் திலகர் சுயாதீனமாக போட்டியிடுகின்றார், அவருக்கு அத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியுடன் கூட்டு உள்ளது என கூறவில்லை. பொதுத்தேர்தலில் அவ்வாறு நடக்கலாம் என்ற ஊகத்தையே வெளிப்படுத்தியுள்ளேன்.)

அதேவேளை மலையகத்தில் உரிமை, புரட்சி அரசியலை முன்னெடுத்த அமரர் சந்திரசேகரனின் மகள், அனுசா சந்திரசேகரன் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்காமல் நடுநிலைபோக்கை கடைபிடித்துவருகின்றார்.

எனினும், நாடாளுமன்ற தேர்தல் ஊடாக அவர் மீண்டும் தீவிர அரசியலில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிலவேளை அனுசாகூட தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து களமிறங்கும்பட்சத்தில் அதுவும் திருப்புமுனையாக அமையக்கூடும் என கருதப்படுகின்றது. கடந்தமுறை சுயேச்சையாக களமிறங்கி தனக்கு வாக்கு வங்கி இருப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

வாக்களிப்பு வீதம்

மாற்றம் குறித்த கோஷம் அரசியல் களத்தில் இன்னும் ஓங்கி ஒலிப்பதாலும், பொருளாதார நெருக்கடியின்போது பட்ட துன்பங்களாலும் வாக்களிப்பின் முக்கியத்துவத்தை மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.

இதனால் ஏனைய ஜனாதிபதி தேர்தல்களைவிடவும் இம்முறை அதிக வாக்களிப்பு வீதம் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளிநாடுகளில் தொழில் புரிபவர்கள், ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்றுள்ளவர்கள், சிறைக் கைதிகள், தீவிர நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறும் நோயாளிகள் உள்ளிட்ட தரப்புகளுக்கு வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

16, 17 ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை. 20 ஆம் திகதியும் விடுமுறை, இவ்வாறு விடுமுறையாலும், தேர்தலாலும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் உறவினர்களின் வீடுகளுக்கு செல்கின்றனர்.

மேலும் சிலர் சுற்றுலா செல்வதற்கு உத்தேசித்துள்ளனர்.(வாக்கு உங்கள் உரிமை ,அதனை பயன்படுத்துங்கள். பிறகு கவலைப்படுவதில் அர்த்தம் இருக்காது)

அநுரவுக்கு பலத்த பாதுகாப்பு

ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. அவருக்கு ஓய்வு தேவையென மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்தாலும்தொடர்ந்து பரப்புரைகளில் அவர் பங்கேற்றுவருகின்றார்.

அநுரவுக்கான உணவு உள்ளிட்ட விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகளையெல்லாம் அநுரவின் பாதுகாப்புக்காக உள்ள தோழர்களால் முன்னெடுக்கப்படுகின்றது.

அநுரகுமார திஸாநாயக்க அரியணையேறுவதை பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருப்பதாக வெளிநாடுகளில் இருக்கும் தோழர்கள் சமூகவலைத்தளங்களில் ஆவலுடன் பதிவுகளை பதிவிட்டுவருகின்றனர்.

கடைசி பரப்புரைக் கூட்டங்கள்

18 ஆம் திகதி கடைசி பிரச்சாரக் கூட்டத்தை பிரமாண்டாகவும், வெற்றிகரமாகவும் நடத்தி முடிப்பதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கூட்டணிகளின் தலைவர்களெல்லாம் கடைசி கூட்டத்தில் ஒன்றாக பங்கேற்பதால் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாட்டுக்குரிய வியூகங்களும் வகுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரின் கடைசி தேர்தல் பிரசாரக் கூட்டம் மருதானை பகுதியை மையப்படுத்தியதாக அமையவுள்ளது.

அநுரகுமார திஸாநாயக்க நுகேகொடையிலும், நாமல் ராஜபக்ச கெஸ்பேவ பகுதியிலும் கூட்டத்தை நடத்தவுள்ளனர்.

அதேவேளை ஜனாதிபதி தேர்தல் நிலவரம் தொடர்பில் வெளிநாட்டு உளவு அமைப்புகளும் களத்தில் இறங்கி கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளன. அமெரிக்க, இந்திய கூட்டணிக்கும், சீனாவுக்கும் இலங்கை தேர்தல் முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின்றது.

ரணில், சஜித்

ஜனாதிபதி தேர்தலில் தம்மால் வெற்றிபெறமுடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் உறுதியாக நம்புகின்றனர்.

ஜனாதிபதி பக்கம் நிற்கும் மொட்டு கட்சி உறுப்பினர்களுக்கும், சஜித் அணியினருக்கும் அவர்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் தேர்தல் இதுவென்பதால் முழுவீச்சுடன் செயற்பட்டுவருகின்றனர்.

ஜனாதிபதி ரணிலால் 70 லட்சம் வாக்குகளை பெற்றுவிட முடியும் என அவருக்கு சார்பாக பரப்புரைச் சமரில் களமிறங்கியுள்ள தரப்புகள், தரவுகளுடன் சுட்டிக்காட்டியுள்ளன.

அதேபோல் சஜித் கூட்டணி தரப்பும் 50 வீதத்தை கடந்துவிடலாம் என நம்புகின்றது. வெளிநாட்டு உளவு அமைப்புகளின் அறிக்கைகள்கூட இதனை வெளிப்படுத்தியுள்ளன என சஜித்துக்கு நெருக்கமானவர்கள் கூறிவருகின்றனர்.

கருத்து கணிப்புகள், பிரச்சாரங்கள், விளம்பரங்கள் எவ்வாறு அமைந்தாலும் தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்படும் முடிவே அதிகாரப்பூர்வமானது.

இந்த ஜனநாயகத் திருவிழாவில் வாக்காளர்களே நாயகர்கள், அவர்களின் முடிவு என்னவென்பது 22 ஆம் திகதியே தெரியவரும்.

கட்டுரை – ஆர்.சனத்