இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை மறுதினம் 24ஆம் திகதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டு வரவுள்ளார்.
எஸ்.ஜெய்சங்கர், இந்த பயணத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட பல்வேறு தரப்பினருடன் சந்திப்புகளை நடத்த உள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு
கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தின் பின்னர் முதலாவதாக இலங்கை வரும் இராஜதந்திரியாக எஸ்.ஜெய்சங்கர் உள்ளதுடன், இவரது பயணம் தொடர்பில் சீனாவும் கழுகு பார்வை செலுத்தியுள்ளது.
அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவானதற்கு வாழ்த்துத் தெரிவித்த முதல் இராஜதந்திரியும் எஸ்.ஜெய்சங்கர்தான்.
இவ்வாண்டு ஆரம்பத்தில் அநுரகுமார திஸாநாயக்கவை புதுடில்லிக்கு அழைத்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்த அவர், இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தியிருந்தார்.
புதுடில்லிக்கான பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியிருந்த அநுரகுமார திஸாநாயக்க, இந்தியாவுக்கும், தெற்காசிய பிராந்தியத்துக்கும் பாதகமான எந்தவொரு நிலைப்பாட்டையும் எதிர்காலத்தில் தாம் எடுக்கப்போவதில்லை என கூறியிருந்தார்.
இராஜதந்திர உறவை கட்டியெழுப்ப இந்தியா விரும்புகிறது
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு கடந்த காலத்தைவிட குறிப்பிடத்தக்களவு மேம்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
என்றாலும், தேசிய மக்கள் சக்தியை அல்லது அநுரகுமார திஸாநாயக்கவை சீனா பக்கம் செல்லவிடாது முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் புதுடில்லி ஈடுபட்டுள்ளது.
அதற்கான முதல்கட்ட நகர்வாகவே எஸ்.ஜெய்சங்கரின் இந்த உடனடி பயணம் இடம்பெறுகிறதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கொள்கை ரீதியாக தேசிய மக்கள் சக்தி சீனாவுடன் ஒத்துப்போவதற்கு பல்வேறு சாதகமான காரணிகள் உள்ளன. ஆனால், அதற்கான அனைத்து சந்தர்ப்பங்களையும் தகர்த்தெறிந்து வலுவான இராஜதந்திர உறவை அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்துடன், கட்டியெழுப்ப இந்தியா விரும்புகிறது.
இந்தியாவின் அண்டைய நாடுகளில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் ஆட்சிமாற்றங்கள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பூகோள அரசியல் நகர்வுகள் மற்றும் இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் பாரிய அச்சுறுத்தலான காரணிகளாக மாறிவருவதால் இந்தியா தமது இராஜதந்திர உறவுகள் குறித்து மீள் பரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளது.
சர்வதேசத்துக்கு தெளிவுப்படுத்துவது ஜெய்சங்கரின் நோக்கம்
பிராந்தியத்தில் சிறிய நாடாயினும் இலங்கையின் பூகோள அமைவிடம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் கடல் போக்குவரத்தில் முக்கிய தாக்கத்தை செலுத்துகிறது. அதன் காரணமாகவே தமிழ் மக்களின் அரசியல் நகர்வுகளை தீர்மானிக்கும் சக்தியாகவும் இருக்க இந்தியா விரும்புகிறது. அதன் ஊடாக இலங்கையுடன் தொடர்ந்து பேச்சுகளில் ஈடுபட முடியும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு.
அதேபோன்று சீனாவை காட்டிலும் முதலீகளை இலங்கையில் மேற்கொள்வதன் ஊடாக ஆளும் அரசாங்கங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என இந்தியா கருதுகிறது.
இந்த நிலையில், அநுரகுமார தமது வெளிநாட்டு கொள்கைகளை தீர்மானிக்க முன்னர், இந்தியாவின் நலன்கள் தொடர்பில் கடுமையான அக்கறையை செலுத்த வேண்டுமென்ற செய்தியை தெளிவுபடுத்தவே, ஜெய்சங்கர் அவசரமாக இலங்கைக்கு வருவதாகவும், இலங்கையில் இந்தியாவின் செல்வாக்குதான் இருக்குமென்ற செய்தியை சர்வதேசத்துக்கு தெளிவுப்படுத்தும் ஜெய்சங்கரின் நோக்கமாக இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.