இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

0
16
Article Top Ad

“இலங்கையின் புதிய அரசுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும். இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு வழங்கும்.”

– இவ்வாறு உறுதியளித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர்.

இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்துப் பேசியபோதே மேற்கண்டவாறு உறுதியளித்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை இலங்கை வந்தடைந்தார்.

அவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி அருணி விஜேவர்தன மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் வெளிவிவகார அமைச்சுக்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வரவேற்றார்.

இரு நாடுகளின் நீண்ட கால நட்புறவை வலுப்படுத்தி இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இரு அமைச்சர்களும் விவாதித்தனர்.

அதன்பின்னர் ஜனாதிபதி அலுவலகத்துக்குச் சென்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தார்.

புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜெய்சங்கர், இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.

அத்துடன், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருடனும் இந்திய தூதுவர் பேச்சு நடத்தினார்.