ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை கடந்த அரசாங்கங்களைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கமும் ‘வலுவாக நிராகரிக்க’ தீர்மானித்துள்ளது.
புதிய அரசாங்கம் கலந்துகொள்ளும் முதலாவது ஜெனீவா அமர்வு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடராகும், இது இம்மாதம் 11ஆம் திகதி நிறைவடைகிறது.
இணைத் தலைமை (Core Group) எனப்படும் ஆறு நாடுகள் ஒன்றிணைந்து, இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக 2021 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் கால அவகாசம் வழங்குவதற்கு இந்த ஆண்டு வரைபில் முன்மொழியப்பட்டுள்ளது.
பிரேரணைக்கு எதிராக வெளிவிவகார அமைச்சர் முன்வைத்த விடயங்களை நேற்று (ஒக்டோபர் 7) கூடிய அமைச்சரைவை குழு பரிசீலித்தது.
“இந்தப் பிரேரணையில் உள்ள பல விடயங்களை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், புதிய அரசாங்கம் மனித உரிமைகளை பாதுகாக்க புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு எமக்கு சிறிது கால அவகாசம் தேவை” என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (ஒக்டோபர் 8) கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
“மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 51/1 அடிப்படையில் தொடர்புடைய அனைத்து பணிகளையும் நீட்டிப்பது, அவையின் 58ஆவது அமர்வில், ஐ நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வாய்மொழியாக ஒரு அறிக்கையை அளிப்பது மற்றும் 60ஆவது அமர்வின் போது, இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் விவாதிக்கப்படக் கூடிய முழுமையான அறிக்கையை முன்வைக்கவும்” இந்த வருடம் ஜெனீவா அமர்வில் முன்வைக்கப்படும் வரைபில், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் கோரியிருந்தது.
பதினைந்து வருடங்களாக நீதி கிடைக்காத போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அரசாங்கத்தின் தாமதம் தொடர்பில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்களை சேகரிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் நிறுவப்பட்டுள்ள வெளி சாட்சிய சேகரிப்பு பொறிமுறையின் அதிகாரங்களை நீடிப்பதற்கான எந்தவொரு முன்மொழிவுக்கும் உடன்படுவதில்லை எனவும் இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.