ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு ஜோ பைடன் வாழ்த்து

0
11
Article Top Ad

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை நினைவு கூர்ந்துள்ள ஜோ பைடன், முழு அமெரிக்க மக்களின் சார்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதோடு, இலங்கையின் ஜனநாயகத்தை மேலும் பலப்படுத்துவதன் மூலம் கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியை அமைதியான முறையில் முன்னெடுத்தமைக்கும் தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

“இந்த தேர்தல் இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களின் பலத்தையும், ஜனநாயகத்தின் அடிப்படைகளான அமைதியான, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலின் மூலம் தமது எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்வதற்கான இலங்கை மக்களின் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகிறது” எனவும் ஜோ பைடன் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் ஸ்திரத்தன்மை, சுபீட்சம் மற்றும் முன்னேற்றத்தை அடைவதற்கு அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஒத்துழைப்பை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

பொருளாதார வளர்ச்சி, பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஜனநாயக ஆளுகை ஆகிய பல துறைகளின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகவும், இலங்கையின் சகல பிரஜைகளுக்கும் நிலையான, வளமான மற்றும் நியாயமான நாடொன்றைப் பற்றிய எதிர்பார்ப்பை அடைவதற்கும் அமெரிக்காவின் ஒத்துழைப்பு கிட்டும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க-இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிப்பதாகவும் பிராந்தியத்திற்கு நன்மை பயக்கும் மற்றும் ஜனநாயகக் கொள்கைகளைப் பாதுகாக்கும் முன்னெடுப்புகள் தொடர்பில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்பட தயாராக இருப்பதை இந்த வாழ்த்துச் செய்தி எடுத்துக்காட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here