ராஜபக்ஸக்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை : தோல்விப் பயத்தால் பொதுத் தேர்தலில் எவரும் போட்டியிடவில்லை

0
71
Article Top Ad

 

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கடந்த இரண்டு தசாப்த காலமாக கோலோச்சிய ராஜபக்ஸ சகோதரர்கள் எவரும் நேரடியாக களத்தில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ராஜபக்ஸ குடும்பத்தைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ஸ,  நாமல் ராஜபக்ஸ, சமல் ராஜபக்ஸ மற்றும் சசீந்திர ராஜபக்ஸ  ஆகியோர் வெற்றிபெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தனர். இவர்களைத் தவிர பஸில் ராஜபக்ஸ தேசியப்பட்டியல் ஆசனத்தின் மூலமாக பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்திருந்தார். அத்துடன் ஜனாதிபதி என்ற வகையில் கோட்டாபய ராஜபக்ஸவும் பாராளுமன்றத்திற்கு முக்கியமான சந்தர்ப்பங்களில் பிரசன்னமாகியிருந்தார்.

கோட்டாபய பதவியில் இருந்த இரண்டரை வருட காலப்பகுதியில் அமைச்சரைவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக ஜந்து ராஜபக்ஸக்கள் பதவியில் இருந்ததுடன் சசீந்திர ராஜபக்ஸ முக்கியமான இராஜங்க அமைச்சர் பொறுப்பை வகித்திருந்தார்.

கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி பதவிக்கு மேலதீகமாக பாதுகாப்பு உட்பட முக்கிய அமைச்சுக்களைத் தன்வசம் வைத்திருந்ததுடன மஹிந்த ராஜபக்ஸ பிரதமர் பதவியுடன் முக்கிய பல அமைச்சுக்களை வகித்திருந்தார். இவர்களைத் தவிர பஸில் ராஜபக்ஸ ,சமல் ராஜபக்ஸ மற்றும் நாமல் ராஜபக்ஸ ஆகியோரும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக முக்கிய பொறுப்புக்களை வகித்திருந்தனர்.

ஆனால் 2022ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பெரும் பொருளாதார வீழ்ச்சியும் அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட அரகலய மக்கள் புரட்சியும் ராஜபக்ஸக்களை பதவியில் இருந்து துரத்தியடிக்க வழிகோலியது.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுண கட்சியின் சார்பாக போட்டியிட்டிருந்த நாமல் ராஜபக்ஸ மிக மோசமான தோல்வியைத் சந்தித்திருந்தார். 2019ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 69 லட்சம் வாக்குகளை கோட்டபாய பெற்றிருந்த போதும் இம்முறை தேர்தலில் நாமல் ராஜபக்ஸவால் வெறுமனே 342,781 வாக்குகளை மாத்திரமே பெறமுடிந்தது. இது அளிக்கப்பட் ட மொத்த வாக்குளில் 2. 5 சதவீத வாக்குளை மாத்திரமே அவர் பெற்றதுடன் ராஜபக்ஸக்களின் கோட்டையாக வர்ணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டையில் கூடத் தோல்வியைத் தழுவியிருந்தார்.

போர்க்குற்றங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டதாக ஐநா உட்பட பலதரப்புக்களில் இருந்தும் குற்றஞ்சாட்டப்படும் இறுதிப்போரை தமிழர்களுக்கு எதிராக மிகவும் மிலேச்சகரமான வகையில் முன்னெடுத்து வெற்றிவாகை சூடியதால் சிங்கள மக்களால் கொண்டாடப்பட்ட ராஜபக்ஸக்கள் இன்று அவர்களாலேயே அரசியல் குப்பைக் கூடைக்குள் தூக்கியெறியப்பட்டுள்ளனர்.

சிங்கள மக்களில் கடும் துவேசம் நிறைந்த கடும் போக்குக் கொண்ட தரப்பினர் மத்தியில் இன்னமும் ராஜபக்ஸக்கள் இன்னமும் ஹீரோக்களாக 2022 ஆண்டு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு ராஜபக்ஸக்களின் ஊழல் மோசடி ஆட்சியே காரணம் என பெரும்பான்மையான மக்கள் நம்புவதாலும் ஊழல் மோசடிக்கு எதிரான அலை நாட்டில் வீசுவதாலும் மஹிந்த ராஜபக்ஸ, சமல் ராஜபக்ஸ ,கோட்டாபய ராஜபக்ஸ, பஸில் ராஜபக்ஸ எவரும் தேர்தலில் இம்முறை போட்டியிடவில்லை.

நாமல் ராஜபக்ஸவோ இம்முறை பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் மாத்திரமே பெயரிடப்பட்டுள்ளார். ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவர் பொதுத் தேர்தலில் நேரடியாக ஒரு வேட்பாளராக போட்டியிட தயங்கி தேசியப்பட்டியல் மூலமாக வர முயற்சிக்கின்றமை எந்தளவிற்கு ராஜபக்ஜக்களுக்கு தோல்விப்பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் காண்பிக்கின்றது.