பாரிய மனித புதைகுழி: விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை

0
6
Article Top Ad

ஆறு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய புதைகுழியின் அகழ்வு தொடர்பான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மன்னார் சதொச மனித புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட நிலையில் இதுவரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த மனித எச்சங்கள் மற்றும் பிற பொருட்களை பிரித்தெடுக்கும் நடவடிக்கை, கடந்த வார இறுதி வரை, ஐந்து நாட்களாக, மன்னார் நீதவான் முன்னிலையில் இடம்பெற்றதாக மன்னாரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி சாந்திப்பிரகாசம் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

“மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சதொச மனித புதைகுழி தொடர்பான வழக்கு கடந்த திங்கட்கிழமை (7) தொடக்கம் நேற்று வெள்ளிக்கிழமை (11) வரை ஏற்கனவே சதோச மனித புதைகுழியில் அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளோடு, காணப்படும் வேறு பொருட்கள் காணப்படும் பெட்டிகள், பொதி செய்யப்பட்டு, நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தன.

பல வருடங்களுக்கு பிற்பாடு, குறித்த ஐந்து நாட்களும் (ஒக்டோபர் 7-11) பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரும், சட்ட வைத்திய அதிகாரி குழுவும், மன்னார் நீதவான் முன்னிலையில், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினரும், பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளும் நீதிமன்ற அலுவலகர்களும் இணைந்து தரம் பிரித்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதன் போது மனித எலும்புகள் தனியாகவும், அதனுடன் எடுக்கப்பட்ட பிற பொருட்கள் தனியாகவும் பிரித்தெடுக்கப்பட்டு, பொதி செய்யப்பட்டு பாதுகாப்பாக நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டது.”

மன்னார் சதொச மனித புதைகுழி தொடர்பான சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை மற்றும் அகழ்வினை மேற்கொண்ட தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கை ஆகியவற்றை எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் கோரியுள்ளததாக சட்டத்தரணி நிரஞ்சன் மேலும் தெரிவித்தார்.

“இது தொடர்பான மேலதிக விடயங்கள் சம்பந்தமாக மனித எலும்புகள் குறித்து சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை யும், மீட்கப்பட்ட ஏனைய பொருட்கள் குறித்து பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கையையும் நீதிமன்றம் கோரியுள்ளது. அவர்கள் குறித்த விடயங்கள் தொடர்பாக எதிர்வரும் புதன்கிழமை (16) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, இவ்விடயம் தொடர்பாக தீர்மானிக்கப் படவுள்ளது.

அவர்கள் உரிய சான்றுப் பொருட்களை கொழும்பில் உள்ள தமது நிறுவனங்களுக்கு எடுத்துச் சென்று அகழ்வாராய்ச்சி செய்து அவை எந்த காலப்பகுதிக்கு உரியது என தொல்பொருள் திணைக்களமும், அந்த எலும்புக் கூட்டுத் தொகுதிகளில் இறப்புக்கான காரணம், வயது, பாலினம் போன்ற விடயங்கள் தொடர்பான மானுடவியல் அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.”

2018 ஆம் ஆண்டு நிர்மாணப் பணிகளின் போது அடையாளம் காணப்பட்ட மன்னார் சதொச மனிதப் புதைகுழியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது 28 சிறுவர்கள் உட்பட 376 மனித உடல் உறுகண்டுபிடிக்கப்பட்டன.

குற்றம் இடம்பெற் இடமாக கருதப்பட்டு மன்னார் சதொச மனிதப் புதைகுழி தோண்டப்பட்டு வருவதாக சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ச 190ஆவது நாள் அகழ்வு விசாரணையின்போது ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

மன்னார் சதொச புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட ஆறு எலும்புகளை ஆய்வு செய்த அமெரிக்காவின் மியாமியை தளமாகக் கொண்ட பீட்டா அனலிட்டிக்ஸ் நிறுவனம் (Beta Analytic Inc.) அவை கி.பி.1404 -1635ற்கும் இடைப்பட்ட நூற்றாண்டுகளை சேர்ந்தது என தீர்மானித்தது.

ஜூலை 2019 இல், அந்த தீர்மானத்தை கடுமையாக நிராகரித்த களனிப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த தொல்லியல் முதுகலைப் பிரிவின் பேராசிரியர் ராஜ் சோமதேவ, வெகுஜன புதைகுழியின் காலத்தைப் பற்றிய நம்பகமான தீர்மானத்திற்கு வரக்கூடிய வகையில், ஜூலை 2019 இல், மனித எலும்புகளுடன் தோண்டியெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பொருட்களில் புதிய விசாரணைகளை ஆரம்பித்தார்.

அப்போது கண்டெடுக்கப்பட்ட எலும்புகளில் சிலவற்றில் ஆழமான வெட்டுக்காயங்கள் காணப்பட்டதுடன், ஒன்றாகக் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்படும் எலும்புத் துண்டுகளும் மனித புதைகுழியில் காணப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here