ஹிஸ்புல்லாவின் நிதிக் கட்டமைப்பை குறிவைத்தது இஸ்ரேல்: லெபனான் முழுவதும் வங்கிக் கிளைகள் மீது தாக்குதல்

0
6
Article Top Ad

ஹிஸ்புல்லாவை ஆதரிப்பதாகக் கூறும் வங்கியின் கிளைகளைக் குறிவைத்து, லெபனான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

லெபனான் முழுவதும் அல்-கார்ட் அல்-ஹசன் (AQAH) கிளைகளைக் கொண்ட கட்டிடங்களை இலக்கு வைத்து குறைந்தது 16 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக லெபனானின் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக பெய்ரூட் விமான நிலையத்திற்கு அருகில் இரண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், லெபனானில் 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலிய இராணுவம் எச்சரிக்கை விடுத்தாகவும் கூறப்படுகின்றது.

எச்சரிக்க வழங்கிய சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு முதல் விமானத் தாக்குதல்கள் நடந்தன. இதனையடுத்து மக்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்த பகுதிகளுக்குச் செல்ல முயன்றனர்.

ஹிஸ்புல்லாவை ஆதரிப்பதாகக் கூறும் அல்-கார்ட் அல்-ஹசன் வங்கியின் கிளைகளைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த வங்கியின் கிளைகள் பெரும்பாலும் பரபரப்பான மாவட்டங்களில் குடியிருப்பு கட்டிடங்களின் தரை தளத்தில் அமைந்துள்ளன.

இந்த நிறுவனம் 2007ஆம் ஆண்டு முதல் அமெரிக்க பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்டுள்ளது.

லெபனான் அரச செய்தி நிறுவனம் கூறியுள்ளபடி, பெய்ரூட்டில் உள்ள தாஹிஹ் மீது 11 தாக்குதல்களும், நாட்டின் தெற்கில் மூன்று தாக்குதல்களும், ஹிஸ்புல்லா இருக்கும் பகுதிகளான பெக்காவில் இரண்டு தாக்குதல்களும் நடந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையைில், அல்-கார்ட் அல்-ஹசன் வங்கிக் கிளைகளை இஸ்ரேல் குறிவைத்தது பெய்ரூட்டில் “பரவலான பீதியை” ஏற்படுத்தியது என்று லெபனானுக்கான ஐ.நா. சிறப்பு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

லெபனான் முழுவதும் இந்த வங்கியின் 34 கிளைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹிஸ்புல்லாவின் நிதிக் கட்டமைப்பை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார்.

“வடக்கு இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் மற்றும் அதன் ஏவுகணை தாக்குதல்களுக்கு ஹிஸ்புல்லா பெரும் விலை கொடுக்க நேரிட்டுள்ளது. ஈரான் ஆதரவு பெற்றுள்ள இந்த அமைப்பு வீழும் வரை தொடர்ந்து தாக்கிக்கொண்டே இருப்போம்” என்றார்.

இதனிடையே, தமது விமானப்படை “ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு மற்றும் அதன் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளித்த தளங்களை குறிவைத்தது” என்று இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் (IDF) நேற்று காலை ஒரு அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.

அல்-கார்ட் அல்-ஹசன் ” ஹிஸ்புல்லாவின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நேரடியாக நிதியளிக்கின்றது.

ஆயுதங்கள் கொள்வனவு மற்றும் ஹிஸ்புல்லாவின் இராணுவப் பிரிவில் உள்ள செயல்பாட்டாளர்களுக்கு பணம் செலுத்துதல் உட்பட பல நடவடிக்கைகள் இந்த வங்கியூடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here