ஜனாதிபதி தேர்தலில் அதிகமாக செலவு செய்தது யார்?

0
6
Article Top Ad

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் ஒருவருக்காக, வேட்பாளர் ஒருவர் 109 ரூபாவை செலவிட வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளர்களின் செலவின கணக்கறிக்கை வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்காக 186 கோடியே 82 இலட்சத்து 98, 586 ரூபாய் செலவிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 35 பேர் உரிய செலவின அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட காலப்பகுதிக்குள் தமது செலவின அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தனர்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 83 கோடியே 62 இலட்சத்து 58,524 ரூபாவை செலவு செய்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவும் தமது செலவறிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி கட்சி மற்றும் ஜேவிபி கட்சியின் வங்கி கணக்குகளில் பெறப்பட்ட நன்கொடைகள் உள்ளிட்ட உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளார்களால் வழங்கப்பட்ட 52 கோடியே 79 இலட்சத்து 99,089 ரூபாய் 38 சதத்தை தேர்தல் நடவடிக்கைகளுக்காக அவர் செலவிட்டுள்ளார்.

சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளராக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிக செலவினத்தை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்துள்ளார்.

அவர், 99 கோடியே 3 இலட்சத்து 27,687 ரூபாய் 16 சதத்தை செலவிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ எழுது பொருட்களுக்காக மாத்திரம் 20,000 ரூபாவை பயன்படுத்தியுள்ளதாக அவரது செலவறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இலத்திரனியல், அச்சு ஊடக மற்றும் சமூக ஊடக பிரசார நடவடிக்கைகளுக்காக இரண்டு கோடியே 31 இலட்சத்து 44,987 ரூபாவை செலவிட்டுள்ளதுடன், 38 கோடியே 89 இலட்சத்து 39,000 ரூபாவை தேர்தலுக்காக செலவிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொத்த வருமானம் 18.8 கோடி என்பதுடன், 19.9 கோடி ரூபாய் செலவினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் பொது வேட்பாளரான பா. அரியநேத்திரன், பத்தரமுல்ல சீலரத்ன தேரர், சரத் கீர்த்திரத்ன மற்றும் ஏனைய 10 கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது செலவறிக்கைகளை இதுவரையில் சமர்பிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here